அரசுக்கும் தமக்கும் முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, இருதரப்புக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டு அதன் பின்னர் அந்த அம்சங்களை தேர்வுக் குழுவுக்கு எடுத்துச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டதாகவும், ஆனால் அரசு அதை மீறிச் செயல்படுவது தங்களுக்கு ஏற்புடையதல்ல எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், 13ஆவது சட்டத் திருத்தத்தையும் மாகாண சபை முறையையும் முற்றாக அழிக்க அல்லது வலுவை குறைக்க அரசு தற்போது நடவடிக்கைகளை எடுத்துவருகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்க பாராளுமன்றத் தேர்வுக் குழுவின் மூலம் அரசு ஒரு முன்னெடுப்பைச் செய்யும் நிலையில், அப்படியான ஒரு செயல்பாட்டில் ஈடுபட முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது எனவும் அவர் கூறுகிறார்.
இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்துக்கு 13ஆவது சட்ட திருத்தத்தில் அளிக்கப்பட்டுள்ள அம்சங்களை முற்றாக நிறைவேற்றி அதற்கு மேலாகவும் அதிகாரப் பரவலைச் செய்வோம் என்று கொடுத்த உறுதிமொழியையும் மீறி, இப்போது அதற்கு எதிரான விதத்தில் இலங்கை அரசு செயல்பட்டு வருவதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.
அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்வுக் குழுவையும் அப்படியான நடவடிக்கைக்கு ஒரு களமாக பயன்படுத்த அரசு எண்ணியுள்ள நிலையில், தங்களால் அந்தக் குழுவில் அங்கம் வகிக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
அதிகாரப் பரவலாக்கத்துக்கு ஆதரவான கருத்துக்களை அரசுக்குள்ளேயே கொண்டுள்ள அமைச்சர்கள் திஸ்ஸ விதாரண, ரவூஃப் ஹக்கீம் மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் இந்தக் குழுவில் உள்வாங்கப்படவில்லை என்பதையும் சுட்டுக்காட்டும் சுமந்திரன், அந்தக் குழுவிலும் பெரும்பான்மையினரின் ஆதிக்கமே கூடுதலாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி செயற்பட்டு வருவதாலேயே பாராளுமன்றத் தேர்வுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபெறாது என்று சுமந்திரன் தெரிவித்தார்.