நாட்டின் பல்வேறு சமூகங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அவற்றுக்கிடையே இருக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனடித் தீர்வுகளை பரிந்துரை செய்ய நல்லிணக்கத்துக்கான விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
இந்த விசேட ஜனாதிபதி செயலணியானது அரசியல் கைதிகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கடந்த கால மோதல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைக் குறைப்பது தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை செய்யவுள்ளது.
மேலும் மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது குறித்த சகல விடயங்களையும் ஆராய்ந்து ஆய்வுசெய்து ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு சமர்ப்பித்த இந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இந்த விசேட ஜனாதிபதி செயலணியானது நேரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.