Ad Widget

‘சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பேன்’: சி.வி வாக்குறுதி

உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினை தொடர்பில் சட்டத்துக்கு உட்பட வகையில் தன்னாலான சகல நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்ததாக, போராட்டம் நடத்தும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உடுவில் மகளிர் கல்லூரி அதிபரான சிராணி மில்ஸை, பாடசாலையின் ஆளுநர் சபை நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 3ஆம் திகதி தொடக்கம் பாடசாலை மாணவிகள் சிலரும் பெற்றோர்களும் பழைய மாணவிகளும் போராட்டம் நடத்தி வந்தனர். மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன், கடந்த 8ஆம் திகதி பாடசாலையில் நடத்திய கலந்துரையாடலின் அடிப்படையில், பழைய அதிபர் சிராணி தனது பதவியை விட்டுக்கொடுப்பதாகக் கூறினார். இதனால் மாணவிகளின் போராட்டம் வெற்றியின்றி முடிவுக்கு வந்தது.

அதனை தொடர்ந்து எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கை சீராகத் தொடரும் எனவும், பழைய அதிபர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கருதின், அவர் சட்ட நடவடிக்கைக்கு செல்லலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த மாணவிகள், ‘எங்களுக்கு பழைய அதிபரே தேவை’ என, கோரிக்கை விடுத்து மகஜர் கையளித்து இருந்தனர்.

இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், போராட்டம் நடத்திய மாணவிகள், பெற்றோர்கள், மதகுருமார்களை, நேற்று ஞாயிற்றுக்கிழமை, தன்னுடைய வாசஸ்தலத்தில் சந்தித்தார்.

குறித்த சந்திப்புக்குப் பின்னர் அது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர்கள் தெரிவிக்கையில், ‘எமக்கு பழைய அதிபரே வேண்டும். போராட்டம் நடத்தியமைக்காக புதிய நிர்வாகம் எம்மை துன்புறுத்துகின்றது. எதிர்வரும் நாட்களில் நாம் கல்வி செயற்பாட்டை முன்னெடுக்கும் போது அவர்கள் எம்மைப் பழிதீர்ப்பார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உதவியாளர் என கூறும் நபர், எம்மை நேரடியாக மிரட்டினார். போராட்டம் நடத்தியமைக்காக சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எம்மை நீதிமன்றுக்கு அழைப்போம் என மிரட்டினார்.

இவை தொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவற்றினை முதலமைச்சர் செவிமடுத்தார். சட்டத்துக்கு உட்பட்ட ரீதியில் தன்னால் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை நிச்சயமாக எடுப்பேன்.என முதலமைச்சர் எமக்கு உறுதி வழங்கினார்’ என்றனர்.

Related Posts