சுயேட்சையாக போட்டியிடுங்கள் சட்டத்தரணி குருபரன் கூறும் ஆலோசனை!


சிவில் சமூகத்தினுடைய நிலைப்பாடு வட மாகாண சபை தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் எங்களுடைய கொள்கை நிலைப்பாடு தமிழ் தேசிய அரசியலில் இருக்கும் எந்தவொரு கட்சியும் நேரடியாக மாகாண சபை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதாகும். இந்த நிலைபாட்டை நாம் 2010 முதலே எடுத்து வந்துள்ளோம். 13ஆவது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தீர்வை தமிழ் மக்கள் மீது திணிக்கும் நடவடிக்கைகளை மறுக்கும் வகையிலேயே இந்த நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய அரசியலில் இருக்கும் கட்சிகள் எடுக்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம் என சட்டத்தரணியும் தமிழ் சிவில் சமூகம் பெயரில் கருத்து தெரிவித்து வருபவரும் யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளருமான குமாரவடிவேல் குருபரன் ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கட்சிகள் அனைவரும் ஆதரிக்கும் சுயேட்சைக் குழுவொன்றின் மூலமாக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த முன்மொழிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளாத நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்பதாக 13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வை மற்றும் பிரிந்த வடக்கு கிழக்கை நிராகரித்து தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டு அவ்விஞ்ஞாபனத்திற்கு ஆணை கேட்டு கிழக்கு மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்று சிவில் சமூகம் வெளிப்படையாக கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்திருந்தது. கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை முன்வைக்கமாலேயே அத்தேர்தலை சந்தித்தது என்பது துரதிட்டவசமானது.

அதே போன்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாம் வட மாகாண சபைத் தேர்தல்களில் நேரடியாக போட்டியிடப் போவதாக கடந்த 11 மே 2013 நடைபெற்ற சிவில் சமூகத்திற்கும் கூட்டமைப்பிற்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பில் தெரிவித்திருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாகாண சபை தேர்தல்களில் தாம் பங்கு பற்ற போவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த நிலையில் மாகாண சபையை கைபற்றி அதில் உண்மையிலயே எந்த அதிகாரங்களும் இல்லை என்பதைக் காட்டுவதற்காக மாகாண சபை தேர்தல்களில் பங்குபற்ற வேண்டும் என்ற கருத்து சொல்லப்படுகின்றது. இது ஏலவே வரதராஜப் பெருமாள் தலைமையிலான வடக்கு கிழக்கு மாகாண சபையினால் நிரூபிக்கப்பட்டது என்பது ஒரு புறமிருக்க, இது தான் போட்டியிடுவதற்கான உண்மையான நோக்கம் என்றால் அதனை சுயேட்சை குழு ஊடாகவே மீதிறனோடு செய்ய முடியும். அதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

13ஆவது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளை உச்சமாகப் பயன்படுத்தி அதில் உள்ள போதாத்தன்மையை உலகத்துக்கு குறுகிய காலத்தில் வெளிக்காட்டக் கூடியவர்கள் நிர்வாகவியலில் ஏற்கனவே அனுபவம் உடையவர்களாக இருந்தால் விரும்பத்தக்கது என்பது எமது நிலைப்பாடு. அதற்காக மாகாண சபை என்பது ஒரு மேட்டுக் குடி நிறுவனமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்ல வில்லை. துறை சார்ந்து இயங்குபவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தான் சொல்லுகின்றோம். சட்டம், விவசாயம், மீன்பிடி, அபிவிருத்தி நிர்வாகவியல் ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்கள் மாகாண சபை ஒரு வெற்றுப் பாத்திரம் என்பதை தெளிவாக தமது செயற்பாடுகளின் ஊடாக வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள் என நாம் கருதுகிறோம்.

மேலும் மத்திய அரசாங்கத்தோடும் ஆளுநரோடும் ஒரு அதிகார பேச்சுவார்த்தையை நடத்தக் கூடியவர்களாகவும் இவர்கள் இருக்க வேண்டும். மாகாண சபைக்குரிய சட்டமூலங்களை, உரிய அபிவிருத்தி வேலை திட்டங்களை முன் வைக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இவற்றை ஆளுநரும் மத்திய அரசாங்கமும் தமது அரசியலமைப்பு அதிகாரங்களைக் கொண்டு தடுத்து நிறுத்துவார்கள் என்பது வேறு. ஆனால் ‘முயற்சித்துப் பார்த்தோம், 13ஆவது திருத்தத்தின் போதாத்தன்மையால் தோல்வி அடைந்தோம்’ என்பதை நிரூபிக்கப் போகின்றோம் என்றால் அதற்குரிய வேலைத்திட்டம் எம்மிடம் இருக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று நேரடி அரசியலில் ஆர்வம் இல்லாத அனுபவசாலிகளை ஈர்க்க முடியாத உள்ளகக் குழப்பம் நிறைந்த ஒரு அமைப்பாகவே இருகின்றது. தரமான வேட்பாளர்களை ஈர்க்கக் கூடிய வல்லமை இன்று அதனிடம் உள்ளதா என்ற கேள்வியும் இருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை குறை கூற வேண்டும் என்பதற்காக இவற்றை கூறவில்லை. யதார்த்தத்தை சொல்லுகிறோம். இன்று கூட்டமைப்பின் உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள குளறுபடிகளை வைத்துப் பார்க்கும் போது அத்தகையவர்கள் தான் மாகாண சபையிலும் இருப்பார்கள் என்றால் அதிகாரங்கள் இல்லாததால் வட மாகாண சபை தோல்வி அடைந்தது என்ற செய்தியை வெளிக் கொண்டு வர முடியாது.

தமிழனுக்கு ஒரு நிர்வாகத்தை கொடுத்தால் அவனால் அதனைக் கொண்டு நடத்த தெரியாது என்ற அவப் பெயரே வந்து சேரும். இதனை நாம் நேரடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் சொல்லி இருக்கிறோம். ஆகவே நேரடியாக தமிழ் தேசியக் கட்சிகள் 13 ஆவது திருத்தத்தின் கீழான தேர்தல்களில் பங்கு பற்றவில்லை என்ற நோக்கத்தை எய்துவதற்கு மேலதிகமாக மாகாண சபை முறைமையில் ஒன்றுமே இல்லை என்பதை வெளிக் கொணரக் கூடிய தரமான வேட்பாளர்களை நிறுத்துவதற்கும் சுயேச்சை குழு என்ற பொறிமுறை உதவக் கூடும்.

அனைவரும் ஒற்றுமைப்பட்டு அத்தகைய குழுவை உருவாக்குவதற்கு திடசங்கற்பம் பூண்டால் அதனை நிச்சயமாக செய்து காட்டலாம், வெற்றி பெறவும் வைக்கலாம், தமிழ் தேசிய அரசியலையும் தக்க வைத்துக் கொள்ளலாம், 13ஆவது திருத்தம் ஒரு ஆரம்பப் புள்ளி அல்ல என்பதையும் உலகத்திற்கு நிரூபித்துக் காட்டலாம். இதற்கிடையில் வித்தியாசமாக, ‘பெட்டிக்கு வெளியே’ சிந்தித்து எமது மக்களின் அனுதின அவலத்தை போக்குவதற்கான வழி வகைகளையும் கண்டறிய வேண்டியவர்களாக உள்ளோம் எனவும் குருபரன் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்தி
கிழக்கு தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு, தமிழ் சிவில் சமூகத்தின் வேண்டுகோள்