சட்டத்தரணிக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்த நீதிபதி மறுப்பு

சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்திக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, யாழ் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார்.

அத்துடன், அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர் தள்ளுபடி செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்குப் பணிந்து முதலில் அதனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக தெல்லிப்பழை பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி கடந்த 2ம் திகதி அந்த சட்டத்தரணிக்கு எதிராக மல்லாகம் நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அந்தப் பிடியாணையை இடைநிறுத்தி வைப்பதற்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, சந்தேகநபரான சட்டத்தரணி ஊடாக யாழ் மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனுவைப் பரிசீலனை செய்த நீதிபதி இளஞ்செழியன் அது தொடர்பாக செய்யப்பட்ட சமர்ப்பணத்தை நிராகரித்து, மனுவை தள்ளுபடி செய்தார்.

அத்துடன் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு முதலில் பணிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் பணித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor