கொடிகாமம் பொலிஸாரைத் தாக்க முற்பட்ட சந்தேக நபர் கைது

arrest_1கொடிகாமம் பொலிஸாரைத் தாக்குதவதற்கு முற்பட்டவர்களில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், மேற்படி சந்தேக நபரைக் கைதுசெய்யும்போது அவரிடமிருந்து கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்படி சந்தேக நபர் மட்டுவில் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவரை இன்று செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக நபரை கொடிகாமம் பகுதியில் பொலிஸார் அடையாளம் கண்டுகொண்டு அவரைப் பிடிப்பதற்கு முயன்றபோது, இவர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் மட்டுவில் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

தென்மராட்சி, பாலாறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்குச் சென்ற இரு கொடிகாமம் பொலிஸாரை அங்கிருந்த சிலர் தாக்குவதற்கு முற்பட்டனர். இதனால் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளாது அங்கிருந்து பொலிஸ் நிலையம் திரும்பினர்.

இதனைத் தொடர்ந்து 5 பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கையொன்றை நேற்று திங்கட்கிழமை பகல் (16) பாலாறு பகுதியில் மேற்கொண்டனர். இருப்பினும் இந்தச் சோதனையின்போது எவரும் கைதுசெய்யப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்…

தென்மராட்சியில் பொலிஸார் சோதனை

கொடிகாமத்தில், பொலிஸாரை தாக்க முயற்சி