கொக்குவில் குளப்பிட்டிச் சந்திப்பகுதி விபத்தில் ஒருவர் படுகாயம்

accidentகொக்குவில் குளப்பிட்டிச் சந்திப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ஹன்ரர் வாகன விபத்தில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற இந்த வீதி விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த கட்டட ஒப்பந்தக்காரரான கொழும்பு அவிசாவளையில் வசித்துவரும் சி.உருத்திரமூர்த்தி (வயது-43) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

யாழ்.குளப்பிட்டிச் சந்தியின் கிழக்குப்புறமாக கொக்குவில் இந்துக்கல்லூரியின் பின்பக்க வீதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்ப முற்பட்ட வேளை, அதேதிசையில் யாழ்நகரை நோக்கிப் பயணித்த ஹன்ரர் வாகனத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்தது.

இந்தச் சம்பவத்தை அடுத்து ஹன்ரர் வாகனத்தின் சாரதி யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.