கைகொடுக்கும் நண்பர்கள் என்ற தொனிப்பொருளிலான சுமித்திராயோ தொண்டர் நிறுவனத்தின் யாழ்ப்பாணக்கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வும் அலுவலக திறப்பு நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.
கொழும்பில் தலைமை காரியாலயத்தினைக் கொண்டமைந்த இந்த நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை நேற்று 4ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்ட்டு அதன் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக தற்கொலைக்கு முயற்சிப்பவர்களுக்கும் அதில் பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் பல்வேறு வகையில் மனஉளைச்சலுக்கு உள்ளாகுபவர்களுடன் நேரடியாக நட்பு ரீதியான முறையில் உரையாடி அவர்களை மனஉளைச்சலில் இருந்து விடுபடச் செய்வதனை நோக்காக கொண்டே இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சேவை அடிப்படையில் இயங்கும் இந்த நிறுவனத்துக்கு 18 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒவ்வொரு நாளும் மதியம் 12.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை அலுவலகத்தை நாடமுடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் யாழ்.கிளையை யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பாலகுமரன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சிவநாதன், சுமித்திராயோ தொண்டர் நிறுவனத்தின் கொழும்பு கிளை உத்தியோகத்தர் சத்தியா மற்றும் கை கொடுக்கும் நண்பர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.