யாழ்.வர்த்தகர்களின் நலன் கருதி தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையினரும் வர்த்தகர்களும் இணைந்து உண்ணா விரதப் போரட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் தமிழ் தேசியப் பண்பாட்டு பேரவையின் தலைவர் சு.நிசாந்தன் தலைமையில் இப் போராட்டம் இடம்பெற்றது.
புத்தாண்டை முன்னிட்டு ஒரு மாத காலம் வெளிமாவட்டத்தினர் வர்தக நடவடிக்கையில் ஈடுபட யாழ். கூட்டுறவு நிறுவனத்தினரும் மாநகர சபையும் அனுமதி வழங்கியமையை கண்டித்தும்
இதனால் யாழ் வர்த்தகரீதியில் மிகுந்த நெருக்கடிகளை சந்தித்திருக்கும் யாழ் வர்த்தகர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் தற்காலிக வியாபாரிகளால் ஏற்படும் வியாபாரப் பாதிப்புக்கள் தொடர்பாகவும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப் போராட்டம் அமைந்தது.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்,வர்தக சங்கத் தலைவர்,வர்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இரண்டாம் இணைப்பு
வர்த்தகர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த உண்ணாவிரதப்போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் வடமாகாண முதலமைச்சர் மகஜர் ஒன்றை தனது உதவியாளர் மன்மதராசா மூலம் அனுப்பிவைத்தார்.
இதில் குறிப்பிடப்பட்ட விடயம் வருமாறு –
தற்போது யாழ் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் அவலம் தொடர்பாக சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுப்பது சற்றுக் கடினமாகவே உள்ளது. ஆனாலும் யாழ் வர்த்தகர்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. இதற்கு ஓரே வழி உபவிதிகளை உருவாக்கி சில,பல கட்டுப்பாடுகளை விதித்து அவற்றின் அடிப்படையில் வியாபாரிகளை இயங்கச் செய்வதே.
மேற்படி கூட்டுறவு நிலையங்கள் வியாபாரம் செய்ய உதவும் போது வெளி மாகாணங்களில் இருந்து வருபவர்களுக்கு ஒர வீதமான அறவீட்டையும் உள்ளுர் வியாபாரிகளுக்கு மிகக் குறைந்த ஒரு அறவீட்டையும் அறவிடலாம்.
அதே நேரம் சகலரும் வியாபாரம் செய்யம் உரிமையை மதிக்கும் போதும் நமது உள்ளுர் வியாபாரிகளின் நிலமை புரிந்து நாம் நடவடிக்கை எடுத்தல் அவசியம்.
இம்முறை வருடப் பிறப்புக்கு முன் எம்மால் அதிகம் செய்ய முடியாவிட்டாலும் விரைவில் உப விதிகளை உருவாக்கி கட்டுப்பாடுகளை உண்டுபண்ணி உள்ளுர் வியாபாரிகளுக்கு சலுகைகளை வழங்க ஆவன செய்யவுள்ளோம்.
எனவே இதைக் கருத்திற் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் தெரிவித்ததாக இவ் மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டு போராட்டததை கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.