கூட்டமைப்புடன் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநரை நியமிக்க வேண்டும்: வாசுதேவ

வட மாகாணத்தில் பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளதாவது:-

வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களும், எதிர்க்கட்சியின் அனைவரும் ஐக்கிய இலங்கையொன்றை உருவாக்குவதற்கான பின்புலத்தையும் அதற்கு தேவையான ஒத்துழைப்​பையும் வழங்க வேண்டும்.

இதன் போது அரசாங்கம் மற்றுமொரு விடயத்தையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.வட மாகாண சபைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளின் பெரும்பான்மை அதிகாரத்துடன் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.எனினும் ஒன்றிணைந்த மத்திய அரசாங்கத்தின் இறைமைக்கு அமையவே இவை அனைத்தும் இடம்பெறும்.என்றார்

இதேவேளை பக்கச்சார்பாக நடக்கும் ஆளுனர்கள் மாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள தகுதியற்றவர்கள் என கபே அமைப்பு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் தேர்தல் பிரசார மேடைகளில் பிரசன்னமானதை அவதானிக்க முடிந்ததாக கபே அமைப்பு கூறியுள்ளது.இதுதொடர்பாக குருநாகலில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கீர்த்தி தென்னகோன்:-
வடமேல் மற்றும் வட மாகாண சபைகளின் ஆளுநர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் போது மேடைகளில் ஏறி தமது ஆதரவை வழங்கியதனை எம்மால் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.

இந்த ஆளுநர்கள் கௌரவமான பதவிகளில் இருக்கும் போதே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

எனவே இவ்வாறான பக்கச்சார்பாக நடந்துகொள்ளும் ஆளுனர்கள் பொதுமக்களின் ஆணையினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மாகாண சபையின் முதலாவது அமர்வில் கலந்துக்கொள்வதற்கு தகுதியற்றவர்கள் என்பதனை நாம் உறுதியாக நம்புகிறோம். என்றார்