யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று நடத்தப்பட்ட 3 நிகழ்வுகளிலும் வடக்கு மாகாணசபை ஆளும் தரப்பினர் எவரையும் அழைக்கக் கூடாது என்று கொழும்பு அரச அமைச்சர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனால் அவர்கள் எவருமே அழைக்கப்படவில்லை. என்று பல்கலைக்கழகத் தரப்பினர் கூறியுள்ளனர்.
கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள விவசாய பீட வளாகத் தில் நேற்றுக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
அந்த நிகழ்வில் அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, டக்ளஸ், மற்றும் நாடாளுமன்ற உறுப் பினர் சந்திரகுமார், வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இராணுவத்தினர் பொலிஸார் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.
வடக்கு மாகாண சபை ஆளுகைக்கு உட்பட்ட இந்த நிகழ்வுக்கு முதலமைச்சர் உட்பட எவரும் அழைக்கப்படவில்லை. அவர்களை அழைக்க வேண்டாம் என்று கொழும்பு அரசு அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளதாகப் பல்கலைக்கழகத் தரப்புத் தெரிவிக்கிறது.
ஆயினும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாகப் பல்கலைக்கழகத் தரப்பு கூறியது.
உயர்கல்வி அமைச்சர் 3 இடங்களிலும் குறிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னரே நிகழ்வுகளில் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்துவிட்டார்.கிளிநொச்சி நிகழ்வு 8.30 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டபோதும் 8 மணிக்கு முன்னரே அவர் அங்கு சென்றுவிட்டார்.யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட நிகழ்வு பிற்பகல் 2.30 க்கு எனறு அறிவிக்கப்பட்டபோதும் சுமார் 1.15 மணிக்கே அமைச்சர் அங்கு சென்றுவிட்டார். யாழ்.போதனா வைத்தியசாலை அருகே மாலை 4.30 மணிக்கு அடிக்கல் நடும் வைபவம் இடம்பெறும் என்று கூறப்பட்டபோதும் பிற்பகல் 2.30 மணிக்கு அது நிறைவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.