Ad Widget

கூட்டமைப்பின் பிற்போக்கு நிலைப்பாட்டை மாற்றினால் இணைவேன்

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள பிற்போக்கு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் கூட்டமைப்பின் அரசியல் பரப்பில் நமது தமிழ் முற்போக்குக் கூட்டணியும், பொது நிலைப்பாட்டை முன்வைத்து இணைந்து செயற்படலாம்’ என, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் கணக்கில், இது தொடர்பில் கருத்தொன்றை பதிவேற்றம் செய்துள்ள அவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணி செயற்பட வேண்டும் என ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது. இது, நல்ல ஒரு கருத்து. ஆனால், இதுவரையில் இது நடைமுறையாகாமைக்குக் காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை ஆகும்.

பொதுப் பிரச்சினைகளில் நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதை நான், எப்போதும் சொல்லிலும் செயலிலும் வரலாறு முழுக்க காட்டியே வந்துள்ளேன். ஆனால், எனது எந்த ஒரு நல்லெண்ண சமிக்ஞையையும் யோசனையையும், கூட்டமைப்புத் தலைமை கவனத்தில் எடுக்கவில்லை.

கடைசியாக நான் சொல்லிக் களைத்துப்போன யோசனை, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான கூட்டுச் செயற்பாடாகும். இந்தப் பிற்போக்கு நிலைப்பாட்டை கூட்டமைப்பு தலைமை இனியாவது மாற்றிக்கொண்டால் கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் அரசியல் பரப்பில், நமது தமிழ் முற்போக்குக் கூட்டணியும், பொது நிலைப்பாட்டை முன்வைத்து இணைந்து செயற்படலாம். அதற்குத் தடை இல்லை’ என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related Posts