கூட்டமைப்பின் பிரசாரம் 11 ஆம் திகதி ஆரம்பம்; சம்பந்தன் தலைமையில் பிரமாண்டமான கூட்டம்

tnaவடமாகாணசபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை வடக்கு, மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்று திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளன என்று பிரதித் தேர்தல் ஆணையாளர் (நிர்வாகம்) எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

விருப்பு இலக்கங்கள் கிடைத்ததும் நாளை முதல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தனியாகவும், குழுவாகவும் தமது தேர்தல் பிரசாரக் கூட்டங்களை ஆரம்பிக்கவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள அதன் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர், ஏனைய வேட்பாளர்கள், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன என்று கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, வடமாகாணசபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது எனவும் தெரியவருகின்றது.