கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்கள்! ஒன்று முஸ்லிம் உறுப்பினருக்கு.. மற்றையது ஐவருக்கு பகிர்ந்தளிப்பு?

வட மாகாண சபை தேர்தலில் அமோக வெற்றியீட்டி இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒன்றை முஸ்லிம் பிரஜை ஒருவருக்கு வழங்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அயூப் நஸ்மீன் என்பருக்கே அந்த தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்று  வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

எஞ்சியுள்ள மற்ற ஆசனத்தை சுழற்சி முறையில் ஐந்து வேட்பாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், முதலில் யாருக்கு வழங்குவது என்பது இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, ஐந்து வருட மாகாண சபை பதவி காலத்தில் ஐவர் தலா ஒவ்வொரு வருடம் மாகாண சபை உறுப்பினர்களாக பதவி வகிக்கவுள்ளனர்.

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த உறுப்பினர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஐவருக்கு இந்த  தேசியப்பட்டியல் ஆசனம் பகிர்ந்து வழங்கப்படும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும் இது குறித்து கூட்டமைப்பின் ஏனைய தரப்பினரால் உறுதிப்படுத்த முடியவில்லை.இது செல்வம் அடைக்கலநாதன் எம்பி யின் தனிப்பட்ட முடிவா அல்லது கூட்டமைப்பின் முடிவா என்பதை கூட்டமைப்பு இதுவரை தெரியப்படுத்தவில்லை.