கூட்டமைப்பின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது: ஈபிடிபி

EPDP flagவடமராட்சி கிழக்கில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் புகுந்து குழப்பம் விளைவித்ததாக அக்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது’ என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘வடமராட்சி கிழக்கில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் புகுந்து குழப்பம் விளைவித்ததாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் வழமைபோல் எம்மீது அவதூறு சுமத்தப்பட்டு ஊடகங்களில் வெளியான செய்தியை நாம் முற்றாக மறுக்கின்றோம்.

தேர்தல் பிரசாரக் களத்தில் எம்மீதான திட்டமிட்ட அவதூறுகள் பரப்பட்டு வருகின்ற வேளையிலும், நாம் சகிப்புத் தன்மையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் ஜனநாயக முறைப்படி எமது பிரசார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

இதனால் பெருகிவரும் எமக்கான மக்களின் ஆதரவைக் கண்டு சகிக்க முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், களங்கமற்ற எமது செயற்பாடுகள் மீது கறைபூசும் கபட நோக்கில் செயற்படத் தொடங்கியுள்ளனர்.

உடுத்துறையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து எமக்குக் கிடைத்த தகவலின்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்காக அங்கு வந்திருந்ததாகவும், அக்கூட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்தபடி பொதுமக்கள் எவரும் கலந்து கொள்ளாத நிலையில், அதைக் கண்டு சகிக்க முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒலிபெருக்கி மூலம் எமது கட்சி மீதான வசைமொழிகளைப் பொழிந்திருக்கின்றனர்.

அதுமட்டுமன்றி, உடுத்துறைக் கிராம மக்களை விசனமடையச் செய்யும் வகையில், எமது வடமராட்சி அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீ ரங்கேஸ்வரனை (ரங்கன்) அநாகரிகமான வார்த்தைகளால் வசைபாடியும் உள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த அவ்வூர் மக்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் வாய்த்தகராறும், முறுகல் நிலையும் ஏற்பட்டதாக அறிய முடிகின்றது.

அங்கு நின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோரைப் பார்த்து எமக்காக இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என உள்ளூர் பொதுமக்கள் கேள்வி கேட்ட நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கிருந்து அகன்று சென்றதாகவும் அறியப்படுகிறது.

அங்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கேள்வி கேட்ட பொதுமக்களை நீங்கள் ஈ.பி.டி.பியின் ஆதரவாளர்கள் என்று தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில், எமது வடமராட்சி அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் அவர்கள் உட்பட எமது கட்சி உறுப்பினர்கள் மற்றும் உடுத்துறையிலுள்ள கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் யாழ். வந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நின்றிருந்தனர்.

பொய்யுரைப்பினும் பொருந்த உரைக்க வேண்டும் என்பதற்கு அமைய எமது கட்சி மீது அவதூறு சுமத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பொருத்தமில்லாத ஒரு நேரத்தையும், சூழலையும் தேர்ந்தெடுத்துக் கொண்டமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்மீதான பொய்யான பரப்புரைகளை அம்பலப்படுத்தியுள்ளது. உடுத்துறையில் என்ன நடந்தது என்பதற்கு அங்குள்ள உள்ளூர் மக்களே சாட்சி.

எம்மீதான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை திட்டமிட்டுச் சுமத்துவதின் மூலம் குறுக்கு வழியிலும், அநாகரிகமான முறையிலும் மக்கள் ஆதரவை தேட முனைவதை விடுத்து மக்களிடம் சென்று தமது கருத்துக்களை முன்வைத்து மக்கள் ஆதரவை பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வரவேண்டும்’ என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.