கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளைப் பாராட்டிய தென்னிலங்கை குழுவிற்கு அச்சுறுத்தல்!

tnaவடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் உள்ள உள்ளூராட்சி சபைகள் சுதந்திரமாகவும், மிகவும் திறம்படவும் செயற்படுவதாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தென்னிலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் குழு பயணத்தை நிறுத்திக் கொண்டு உடனடியாக திருப்பியழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.வந்த மேற்படி குழுவினர் யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகள் சிலவற்றைச் சென்று பர்வையிட்டுள்ளனர்.

இதன் பின்னர் உள்ளூர் ஊடகமொன்றுக்கு அவர்கள் கருத்து தெரிவித்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள, உள்ளுராட்சி மன்றங்கள் சுதந்திரமாகவும், வளங்கள் எதுவுமற்ற நிலையிலும் மிகவும் திறம்பட இயங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து மேற்படி குழுவினர் உடனடியாக தத்தமது பிரதேசங்களுக்கு திரும்பிவிட வேண்டும் எனவும் அல்லாதுபோனால் பதவிகள் பறிக்கப்படும் எனவும் அரசு அச்சுறுத்தியுள்ளது.

இதனையடுத்து குழுவினர் உடுவில், வலி,கிழக்கு, பருத்துறை பிரதேச சபைகளுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை முடித்துக் கொண்டு குறித்த பிரதேச சபைகளில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றுக்கும் சொல்லாமல் திரும்பிச் சென்றிருக்கின்றனர்.