குழு மோதலுக்கு தயாரானவர்களில் வாளுடன் ஒருவர் கைது

அல்வாய் வடக்கு மகாத்மா வீதியில் வாளுடன் நின்றிருந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) இரவு கைது செய்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (25) தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் குழு மோதலுக்குச் சிலர் தயாராகி வருவதாக ஞாயிற்றுக்கிழமை (24) இரவு பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து, அவ்விடத்திற்கு பருத்தித்துறைப் பொலிஸார் சென்றுள்ளதுடன் பொலிஸாரைக் கண்டதும் மோதலுக்குத் தயாராக நின்றவர்கள் தப்பித்து ஓடிய போதிலும் வாள்களுடன் நின்ற ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும், அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடையவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், குழு மோதலில் ஈடுபடுவதற்கு 8 பேர் தயாராகவிருந்ததாகத் தெரியவந்ததையடுத்து, தப்பியோடியவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரைப் பருத்தித்துறை நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (25) ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.