குற்றம் சுமத்தப் போனால் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் அனைவருமே புலிகளாவர்: த ஏஜ் பத்திரிகை

TheAge-logoஇலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் மீது குற்றம் சுமத்த முடியுமானால் அவர்கள் அனைவருமே விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று குற்றம் சுமத்த முடியும். ஏனெனில் அவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது ஏதோ ஒரு வகையில் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தவர்களாக இருந்துள்ளனர்.

இதனை வைத்து கொண்டு அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து சுமார் 50 பேரை நாட்டின் புலனாய்வுத்துறை தடுத்து வைத்திருப்பது எந்தவகையில் நியாயம் என்று த ஏஜ் பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 42 வயதான ஒருவர், தொடர்பில் எழுதப்பட்ட கட்டுரையிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

குறித்த பொதுமகன் தாம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது விடுதலைப்புலிகளின் சடலங்களை கொண்டு செல்லல் உட்பட்ட பல பணிகளை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தமது மனைவி உறவினர்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து தாம் இலங்கை இராணுவத்துக்கு எதிராக சண்டையிடவில்லை என்று அந்த பொதுமகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தமது சகோதரன் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டதன் பின்னரே தாம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிவந்ததாகவும் குறித்த பொதுமகன் கூறியுள்ளார்.

இந்தநிலையில் குறித்த பொதுமகன் அவுஸ்திரேலிய நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று கருதுவது ஏற்புடையதல்ல என்று த ஏஜ் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே விடுதலைப்புலிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் கூட அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் பெற்று சுகமான வாழ்க்கையை நடத்துகின்றனர். எனினும் அவர்களுக்கு உதவியவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கணிக்கப்படுகின்றனர்.

எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடயத்தில் உரிய தீர்ப்புகள் அவசியம் என்று த ஏஜ் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 பேரில் 8 பேர் பொதுநலவாய தலைமையகத்துக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பி வந்த போது அவுஸ்திரேலிய கடற்படை தங்களை காப்பாற்றி கரைசேர்த்தபோது தாம் நிம்மதியடைந்தோம்.

எனினும் தற்போது கம்பிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டுள்ளபோது இலங்கையில் இருந்த நினைவுகளை மீட்டிபார்க்கமுடிகிறது என்று குறித்த 8 பேரும் குறிப்பிட்டுள்ளனர்