குடும்ப அரசியலுக்குள் கூட்டமைப்பு குதிக்கின்றதா?

மகிந்த இராஜபக்ச ,கருணாநிதி, காந்தி குடும்ப அரசியல்களினை பெரும்பாலும் மக்கள் பொதுவாக எதிர்த்தே வருகின்றனர். ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறேது என்று கேட்பது தமது இனத்தின் பரப்பரையினை குறித்தா அல்லது குடும்பங்களைக்குறித்தா என்ற கேள்விகள் காலத்துக்கு காலம் மக்களை சிந்தனையில் உதித்தவண்ணம் இருந்தாலும் ஏதோ சாட்டுக்களை முன்வைத்து அல்லது இயலாமையின் வெளிப்படையாக இது தொடர்ந்த வண்ணம் உள்ளமை கண்கூடு.

இந்த வகையில் தமிழ்த்தேசிய அரசியலிலும் விமர்சனங்களை எதிர்கொண்டு பயணிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குள்ளும் நாம் விரும்பாத குடும்ப அரசியல் முளைவிடத்தொடங்கிவிட்டதை மறுக்கமுடியாது. ஈழத் தமிழர் அரசியலில் குடும்ப அரசியல் புதிதல்ல என்ற பொழுதிலும் குறிப்பிடும் படியாக இருக்கவில்லை.மேலும் அரசாளும் சந்தர்பங்கள் கிடைக்காதிருந்தமை உணர்ச்சி அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டடிருந்தமை தமிழ்த்தேசிய அரசியலில் விடுதலைப்புலிகளின் பங்களிப்பு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடாக முக்கிய பங்கை செலுத்தியிருந்தமை போன்ற காரணிகளால் மறைந்து போயிருந்த இந்த வெறுப்பிற்குரிய குடும்ப அரசியல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் அணியினரால் அறிமுகப்படுத்தபபடுவது அவ்வளவு ஆரோக்கியமானதாக படவில்லை.

வடக்கு மாகாணசபைத்ததேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின் போது அரசல் புரசல்களாக பேசப்பட்ட விடயம் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின்பின் வெளிச்சத்துக்கு வந்தது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின் போது ஒரு எழுதப்படாத உடன்படிக்கையினை செய்து கொண்டதாக தகவல்கள் கசிந்தது. அதாவது விக்கினேஸ்வரனை ஆதரிப்பதற்காக வேட்பாளர் தெரிவில் தனது தம்பியான கந்தையா சர்வேஸ்வரனை வேட்பாளராக களமிறக்க கொள்கையளவில் கூட்டமைப்பின் தலைமையினை இணைங்கச்செய்ததாக அந்த செய்தி இருந்தது. கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர். அவருக்கு யாழ்ப்பாணத்தில் மக்களுடனான எந்த விதமான பின்புலமும் இருந்ததில்லை. ஈபி.ஆர் எல். எவ் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட 4 இடங்களில் ஒன்றின் ஊடாக வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு பத்திரிகைகளில் விளம்பரம் போடப்படும் வரை அவரை இங்கு பலருக்கு தெரியாது என்பதே உண்மை.

இந்நிலையில் செல்வாக்கு மற்றும் தகுதிவாய்ந்த வேட்பாளர் பலம் கொண்ட ஈ..பி.ஆர்.எல் எவ் கட்சியின் வேட்பளர் பட்டியிலில் தனது தம்பியான சர்வேஸ்வரனை இணைப்பதில் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அதிக சிக்கல் இருக்கவில்லை. அவரது சொந்த வாக்கு வங்கியினை நம்பியே தம்பியை களமிறக்கினார் என்று கூறுகின்றார்கள். நிறுத்தியவுடனேயே வென்றால் அமைச்சு ஒன்று அவருக்குத்தான் என்ன கதையும் கட்டிவிடப்பட்டிருந்தது.

அவரது கட்சியின் கோட்டாவில் சுழலியலாளர் ஐங்கரநேரசன், கடற்றொலிலாளர் சமாசத்தினை சேரந்த சுப்பிரமணியம், யாழ் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் ஆகியோர் களமிறக்கப்பட்டிருந்தனர்.தேர்தலில் அவர்களில் அதிகம் கல்விச்சமூகத்தில் பிரபல்யமான ஐங்கரநேசன் கூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருந்தார் கலாநிதி கந்தையா சர்வேஸவரன் ஆரம்பத்தில் வெற்றிபெறவில்லை என்று கூறப்பட் பேதிலும் இறுதி மடிவில் வெற்றியாளராக வந்தார்.விருப்பு வா்குககள் தொடர்பில் வழமை போல சில கட்டுக்கதைகளும் உலாவருகின்றன. மற்றைய இருவரும் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். அந்த நான்குபேர்களில் தம்பியார் சர்வேஸ்வரன் தவிர்ந்த ஏனைய 3 பேரும் நேரடியாக ஈ.பி.ஆர். எல்.எவ் கட்சியுடன் சம்பந்தப்படாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்நிலையில் இவ் வடமாகாணத்தேர்தலில் சுரேஸ் எம்பியின் கட்சிக்குரிய செல்வாக்கு சரிந்துள்ளது என்றே கூறமுடியும். இதற்கு அவரது குடும்ப அரசியலும் முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. எனவே கூட்டமைப்பில் குடும்ப அரசியலினை அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது கட்சிக்கான செல்வாக்கினை குறைத்துக்கொண்டுள்ள சுரேஸ் தொடர்ந்த அதனை சரியவிடாது பாதுகாக்க என்ன செயற்பாடுகளை செய்யப்போகின்றார் என்பதே கேள்விக்குறி. ஆரம்பத்தில் தேர்தலில் சுயேட்சையாக நின்று தோல்வியுற்றிருந்த இவர் கூட்டமைபிபின் ஊடாகவே எம்பியாக முடிந்தமை குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளின் மன்னிப்பின் ஊடாக ஈ.பி.ஆர் எல்.எவ் என்பதே மண்டையன் குழு என்று மக்களிடம் பேசப்பட்ட நிலை மாறி தனக்கு கிடைத்த அங்கீகாரத்தினை குடும்ப அரசியலின் மூலம் குழப்பிவிடுவாரா அல்லது தன்னை மீளாய்வுசெய்து சரியான வழிபயணிப்பார என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்

தர்மலிங்கத்தின் புண்ணியத்தால் அவரது மகன் சித்தார்த்தன் கூடிய செல்வாக்கினை யாழ்ப்பாணத்தில் பெற்றதன் மூலம் கூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று மாகாண சபைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றார்.அதன் மூலம் புளொட் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியலில் செல்வாக்கு செலுத்த தொடக்கியிருக்கின்றமையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கின்றது. இந்த புளொட் அமைப்பு பல விமர்சனங்களுக்குள்ளானதும் இறுதியாக வந்திணைந்த பங்காளிக்கட்சி என்பதும், வவுனியா மக்களிடம் சற்று வெறுப்பை சந்தித்த கட்சி என்பதுவும் கவனிக்கத்தக்கது. சித்தார்த்னின் அரசுக்கு வக்காளத்து வாங்கும் செயற்பாடுகள் ,போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கியதான சில செய்திகள் ,போர் முடிவுற்றதன் பின்னரான பேட்டிகள் சங்கரிக்கு ஏற்பட்ட நிலைபோல சலசலப்பை ஏற்படுத்தியிருந்தமையும் மறுக்கமுடியாது.இருந்தும் அவரை தகப்பனாரின் புண்ணியம் காப்பாற்றியுள்ளது.

ரெலோ அமைப்பு மன்னாரில் கூடிய செல்வாக்கு செலுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஒரு பேரம் பேசும்க ட்சியாக உருவெடுத்துள்ளது. அதனால் அக்கட்சிக்கு வடமாகாண அமைச்சில் ஒரு அமைச்சு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய அழுத்தத்தினை அது கொடுத்துவருகின்றது. அதன் முன்னணி செயற்பாட்டாளராக மன்னார் மாவட்ட எம்பி செல்வம் அடைக்கலநாதன் தொழிற்பட்டு வருகின்றார். யாழில் சிவாஜிலிங்கம் தொழிற்படுகின்றார்.

ஆனந்த சங்கரியின் தமிழர்விடுதலைக்கூட்டணியைப்பொறுத்தவரை அது தற்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசியலில் மக்களால் ஓரங்கட்டப்பட்டுவிட்டது. கிளிநொச்சியை தமிழரசுக்கட்சியின் சிறீதரன் எம்பி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் மூலம் இது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

தற்போது தனிப்பெரும் கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சி கோலோச்சி வருகின்றது. அந்நிலையில் போனஸ் ஆசனப்பங்கீடு விடயத்தில் அமைச்சரவை விடயத்தில் இந்த செல்வாக்குகள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன செலுத்தும் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. இந்நிலையில் அமைச்சரவையில் தமிழரசுக்கட்சி 2 இனை அபகரித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை ரெலோ ஒன்றினை பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கின்றது. எனவே அது மன்னாருக்கு கிடைக்கலாம். அது கூடுதலாக சுகாதார அமைச்சாகவே இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது.

தமிழரசுக்கட்சி தனக்கு எடுக்கவுள்ள 2 இல் ஒன்றை கிளிநொச்சியில் குருகுலராஜாவுக்கே வழங்கும் என கூறப்படுகின்றது . அதில் சிறீதரன் எம்பி பிடியாக இருக்கிறாராம்.மற்றையது யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கலாம். அடுத்த ஒன்று யாருக்கு என்பதை சுரேசின் நடவடிக்கைகள் தீர்மானிக்க போகின்றன என்றே தெரிகின்றது. இருப்பினும சுரேஸ் அவர்கள் தம்பிக்காக வாதாடுவாரா அல்லது தனது மற்றைய வேட்பாளருக்காக வாதாடுவாரா என்று அவருக்குதான் வெளிச்சம். தம்பிக்குத்தான் வாதாடுவார் எனில் குடும்ப அரசியலினை மேலும் உறுதிப்படுத்தி தனது கட்சி செல்வாக்கினை மக்களிடத்திலும் கூட்டமைப்பின் தலைமையிடத்திலும் குறைத்துக்கொள்ளவே வாய்ப்பிருக்கின்றது என கூறலாம். தமிழரசுக்கட்சி உயர்பீடம் தமது நெருங்கிய வட்டாரங்களிடையயே அந்த ஆதங்கத்தினை ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கின்றனராம்.

புளொட் சித்தார்த்தனுக்கு அமைச்சு அவழங்கப்படவெண்டுமென்ற குரல்களை அவைத்தலைவர் பதவி கொடுத்து ஆசுவாசப்படுத்த முயற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில் சுரேசின் முடிவு பலத்த எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கிறது. இதேவேளை தேர்தலில் கூட்டமைப்புக்கு கிடைத்த 2 போனசில் ஒன்று முல்லிம் வேட்பாளருக்கும் மற்றையது முல்லைத்தீவில் பெண்வேட்பாளருக்கும் என கூறப்படுகின்றது.இறுதி முடிவு நாளை தெரியவரும்

எது எப்படியோ அமைச்சுப்பதவிகள் துறைசார்ந்தவர்களிடம் செல்லவேண்டும். அந்த பதவிகள் பொதுநலன் சாரந்ததாகவேயன்றி தனிப்பட்ட நலன்களுக்கானதாக இருக்ககூடாது . இந்த போனஸ் அமைச்சரவைத்தெரிவுகள் கூட்டமைப்புக்குள் குழப்பத்தினை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும்.

-தவா