வடக்கில் வாக்கெடுப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில். என்றுமில்லாத வகையில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம்!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக குடாநாட்டு மக்கள் மிக உற்சாகமாக வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.வன்முறைகள் பெரியளவில் எதுவும் இதுவரை நடந்ததாகத் தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த காலங்களைப் போல் அல்லாது இம் முறை வாக்களிக்கும் நிலையங்களில் மக்கள் பெருமளவு கூடியுள்ளமை அவதானிக்க முடிந்தது. நிறைய வாக்காளர்களுக்கு இது தான் முதல் தேர்தலாக இருக்கிறது.

voting

voting1

voting3

voting5

வாக்களிப்பு அமைதியாக ஆனால் சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர். இளைய தலைமுறை கூடுதல் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.வயதில் மூத்தவர்களும் ஆர்வத்துடன் உறவினர்களின் துணையுடன் வாக்களிக்க சென்றுகொண்டிருப்பதை காணமுடிகிறது.

மக்களைமிரட்டும் பாணியில் மீண்டும் யுத்தம் வேண்டுமென்றால் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என்ற வாசகங்களும் விடுதலைப்புலிப்போராளிகளின் படங்களுடன் ஒட்டப்பட்டுள்ளன!அனேகமாக இன்று நண்பகலுக்கு பின்னர் வாக்களிப்பு களைகட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது! தற்போதைய நிலைவரப்படி வடக்கில் 98 சதவீத வாக்குகள் அளிக்கப்படலாமென நம்பப்படுகிறது!

யாழ்.மாவட்டத்தில் இன்று காலை 7 மணியில் இருந்து காலை 10 மணிவரை 20 வீதமான வாக்காளர்களே வாக்களித்துள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் வடமாகாண சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களில் 20 வீதமானவர்களே இதுரை வாக்களித்துள்ளதாகவும் அடுத்த கட்ட முடிவுகளை பகல் ஒரு மணியளவில் அறியமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 19 வீதமானவர்களே வாக்களித்துள்ளதாகவும் முல்லைத்தீவில் 25 தொடக்கம் 30 வீதமானவர்களே இதுவரை வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


[காணொளி – New Jaffna] – நன்றி

வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வலி. வடக்கு மாதகல் பிரதேசத்தில் வாக்களிக்க சென்ற மக்களை இராணுவ புலனாய்வாளர்கள் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வாக்களித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கில் இதுவரை நடைபெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்களில் 95 வீதமானவை இராணுவத்தினரே மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இன்று கூட இராணுவத்தினர் வாக்களிக்க சென்ற மக்களை வாக்களிக்க செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதுடன் அவர்களை அச்சுறுத்தி உள்ளார்கள். இது தொடர்பகாக நாம் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளோம்.

நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை ஈ.பி.டி.பி.யும் இராணுவத்தினரும் சேர்ந்து யாழில் பல பகுதிகளில் மக்களிடம் விநியோகித்து உள்ளார்கள். இன்று காலை கூட ஒரு பத்திரிக்கையின் பெயரில் அதேபோலான அநமதய பத்திரிகை ஒன்றை வெளியிட்டு தமிழரசு கட்சி இந்த தேர்தலை புறக்கணிக்கின்றது என செய்தி வெளியிட்டு மக்களை குழப்பி உள்ளனர் என மேலும் தெரிவித்தார்.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு மிகவும் உற்சாகமாக இடம்பெற்று வருகின்றது. வர்த்தகர்கள் தமது வியாபார நிலையங்களையும் மூடிவிட்டு வாக்களிப்பதற்கு சென்றுள்ளதனைக் காணக்கூடியதாக உள்ளது. இருப்பினும் மக்களது வாக்கினைத் தடுக்கவும் அவர்களை குழப்பி அரச கட்சிகளுக்கு வாக்களிக்க வைப்பதற்கும் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் குற்றச்சாட்டுக்கள் வெளிவருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து பிரதித் தேர்தல் ஆணையார் மற்றும் கபே அமைப்புகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன்படி வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் அநாவசியமாக நிற்போரின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும் யாழ் மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.அச்சுதன் பொலிசாருக்கு உத்தரவிடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வடமாகாண சபையில் 36 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் இந்த தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 380 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 91 பேரும் மன்னார் மாவட்டத்தில் 160 பேரும் வவுனியா மாவட்டத்தில் 171 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 104 பேருமாக மொத்தம் 906 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் வாக்குச்சாவடிகளில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.குறிப்பாக கிளிநொச்சி மற்றும் விசுவமடு ஆகிய பிரதேசங்களை விட முள்ளிவாய்க்கால் தொகுதியில் மக்கள் ஆர்வமாக உள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை அவதானிக்க கூடியதாகவும் உள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு உழவு இயந்திரம், வான் மற்றும் பஸ்களில் மக்கள் வந்த வண்ணமுள்ளனர் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன், புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, உடையார்கட்டு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் வன்முறைகள்

சாவகச்சேரியில் அங்கவீனமுற்றவர்களை அழைத்துச் சென்ற தேர்தல் கண்காணிப்புக் குழுவான பவ்ரல் அமைப்பின் வாகனம் முகத்தை மறைத்த மோட்டார் சைக்கிள் பேர்வழிகளால் வழி மறிக்கப்பட்டு சாரதி கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளார். ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது.