குடாநாட்டிலும் படையினரால் வாக்காளர் விவரம் திரட்டு

voters-listகிராம சேவையாளர்களிடமிருந்து வாக்காளர் பெயர்ப் பட்டியலைக் கோரும் நடவடிக்கைகளை யாழ். மாவட்டத்திலும் படையினர் ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவப் புலனாய்வாளர்களால் வாக்காளர் பெயர்ப்பட்டியல் கோரப்பட்டிருந்தது. அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்திலும் யாழ். மாவட்டத்திலும் இராணுவத்தினரால் வாக்காளர் பெயர்ப்பட்டியல் கோரும் நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன.

2013 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியல் பதிவுக்காக கிராம சேவையாளர்களுக்கு 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

கிராம சேவையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாக்காளர் பெயர்ப்ப பட்டியலை இராணுவத்தினர் தமக்குத் தருமாறு கேட்டு அதனை போட்டோ பிரதி செய்துவிட்டு மூலப் பிரதியை மீண்டும் கிராம சேவையாளர்களிடம் வழங்குகின்றனர்.

அத்துடன் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் உள்ளவர்களில், தற்போது வெளிநாடு சென்றவர்கள், இறந்தவர்கள், வேறு மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் தொடர்பான விவரங்களும் இராணுவத்தினரால் திரட்டப்பட்டுள்ளன.

சில இடங்களில் பிரதேச செயலகங்களுக்குச் சென்ற இராணுவத்தினர், வாக்காளர் பெயர்ப் பட்டியலை கோரியுள்ளனர். இது தொடர்பாக வடமாகாண தேர்தல்கள் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்துள்ளதாக கிராம சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி

தேர்தலுக்கு முன்னர் படைகளை அகற்றுங்கள் – கபே