கீரிமலை நகுலேஸ்வரத்தில் ஜனாதிபதிக்கு வாசஸ்தலம்!

mahinda_rajapaksaமக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதிக்கப்படாத வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியினுள் ஜனாதிபதிக்கான வாசஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருணத்தை எட்டியுள்ளன.

வலி.வடக்கில் 24 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்னமும் மக்கள் மீளக்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தப் பகுதிகளை இராணுவத் தேவைக்காகச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கீரிமலை, நகுலேஸ்வரம் பகுதியில், உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பிரதேசத்தில் புதிதாக மூன்று மாடிகளைக் கொண்ட மிகப் பிரமாண்டமான கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதிக்கான வாசஸ்தலமே இவ்வாறு பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கண்டியில் ஜனாதிபதி வாசஸ்தலம் உள்ளதைப் போன்று வடக்கு மாகாணத்துக்கான ஜனாதிபதி வாசஸ்தலமாக இது அமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளில் முழுக்க முழுக்கச் சீருடையினரே ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.