கீரிமலை, தையிட்டியில் மீள்குடியேற்றுமாறு வலி.வடக்கு மக்கள் கோரிக்கை

sures with vali vadakkuவலிகாமம் வடக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மயிலிட்டியில் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே கீரிமலை மற்றும் தையிட்டி பிரதேசங்களில் எங்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு’ வலிகாமம் வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய மினிசூறாவளியினால் கோணப்புலம் நலன்புரி முகாமில் தங்கியுள்ள வலிகாமம் வடக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கண்டறிவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் சென்றபோது, அம்மக்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

இதன்போது தொடர்ந்து சுரேஸ் எம்.பி.யிடம் உரையாற்றிய அம்மக்கள், ’23 வருடங்களுக்கு மேலாக எமது நிலங்களை நாங்கள் விட்டு வெளியேறி இன்று சொல்லனா துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றோம். ஒருவரின் முற்றத்தில் இன்னொருவர் வீடு கட்டி வாழும் நிலையில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்’ என்று குறிப்பிட்டனர்.

‘வலிகாமம் வடக்கு முகாம் மக்கள் என்றவுடன் பிரதேச செயலகம் தொடக்கம் பொலிஸ் நிலையம் வரை ஒரு வித்தியாசமான போக்கில் எம்மை பார்க்கும் நிலையே காணப்படுகின்றது.

இதற்கு மேலாக எமது மக்களின் பிரச்சினைகளை நாங்கள் கதைக்கும் போது எங்களை விசரர்கள் என்று இராணுவம் சுட்டிக்காட்டும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பப்பட்டுள்ளோம்’ என்று அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

‘கடந்த முறை ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியிருந்தபோது அங்கு பல பிரச்சனைகளை நாங்கள் எதிர்நோக்கியிருந்தோம்.

ஏசி அறைகளில் இருப்போருக்கு எமது பிரச்சனைகள் தெரியாது. அவர்களின் வீட்டில் உள்ள ஆட்டுத்தொழுவம் போன்றது தான் எமது வீடுகள். வேறு இடங்களுக்குச் சென்று தற்காலிகமாக எம்மால் தங்க முடியாது.

எமது மயிலிட்டி பிரதேசம் எமக்கு கிடைக்காது என்று எமக்கு தெரியும். எனவே கீரிமலை மற்றும் தையிட்டி பிரதேசங்களில் எங்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு பதிலிளத்த சுரேஸ் பிரேமச்சந்திரன் இது தொடர்பில் இராணுவத்தினரிடம் கேளுங்கள் என்று தெரிவித்தார்.