கிளி. மே தின கூட்டத்தில் மயக்கமடைந்த மாவை சேனாதிராசா!

“எமது உரிமைக்காகக் குரல் கொடுக்கும் நாளாக இந்த மே நாள் அமைந்துள்ளது. இன்று சர்வதேச தினமானது ஒடுக்கப்படும் தொழிலாளர்கள் வர்க்கத்தினருடைய உரிமைகளை வென்றெடுக்கும் நாளாக இத் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது.

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்கள் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற நாளாக இன்றைய நாள் இருக்கின்றது.

இன்று தமிழர் தாயகப் பகுதிகளிலே தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ச்சியாக நிலப்பறிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது.

இன்று மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் உரிமைகூடமறுக்கப்பட்டிருக்கின்றது. உலக வரலாற்றில் தமது உரிமைக்காகப் போராடாமல் உரிமைகளைப் பெற்றதாக வரலாறுகள் இல்லை.

அந்த வழியிலேயே எமது உரிமைகளையும் போராடித்தான் பெற வேண்டும்” என தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், உரையாற்றிக் கொண்டிருந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மயக்கமடைந்தார்.

மேடையில் மயங்கிய அவரை, அவரது பாதுகாவலர்கள் பாதுகாப்பான முறையில் ஓரிடத்தில் தங்கவைத்து அவருக்கான முதலுதவியினை வழங்கினர்.

அரை மணித்தியாலங்களுக்கும் மேலாக வெயிலில் நின்று உரையாற்றிய போது தனக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாகவும், சற்றுநேர ஓய்வின் பின் அது சரியானதாகவும்’ மாவை எம்பி தெரிவித்தார்.

mavai-mayday1

mavai-mayday2

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினராலும் கரைச்சிப்பிரதேசசபையினராலும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட மேதின நிகழ்வு நேற்று காலை 9.00 மணிக்கு கரைச்சிப்பிரதேசசபை உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, சி.சிறீதரன், யோகேஸ்வரன், அரியனேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன்சிறில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நல்லையா குருபரன், மட்டக்களப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் இளைஞர் அணித்தலைவர்கள், மாந்தை கிழக்கு, சுண்ணாகம், மட்டக்களப்பு, பாண்டியன்குளம், முல்லைத்தீவு, வலிதென்மேற்கு, கரைச்சி உள்ளிட்ட பிரதேசங்களின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், மக்கள் என 500க்கு மேற்கொண்டோர் கலந்து கொண்டு உலகத்தொழிலாளர் தினத்தைச் சிறப்பித்தனர்.