கிளிநொச்சி யாழ். நீர்வழங்கல் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபா பேர் நேரடியாக நன்மை பெறவுள்ளனர்.

கிளிநொச்சி யாழ். நீர்வழங்கல் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபா பேர் நேரடியாக நன்மை பெறவுள்ளனர். குடிதண்ணீர் வழங்கல் மூலம் சுமார் 3 லட்சம் பயனாளிகளும் கழிவு நீர் அகற்றல் மூலம் 80 ஆயிரம் பயனாளிகளும் நீர்ப்பாசனம் மூலம் 55 ஆயிரம் பயனாளிகளுமாக மொத்தம் 4 லட்சத்து 35 ஆயிரம் பேர் 2015 இல் நன்மை அடைவர்.

இவ்வாறு யாழ். கிளிநொச்சி குடிதண்ணீர் மற்றும் சுகாதார திட்டப் பணிப்பாளரும் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளருமான எந்திரி தி.பாரதிதாசன் நேற்று தெரிவித்தார்.

இரணைமடு அபிவிருத்திக்கான மொத்த முதலீட்டுத் திட்டம் தொடர்பாகவும் இதனால் மக்கள் அடையப் போகும் நன்மைகள் குறித்தும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சுத்தமான குடிதண்ணீர் மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கான தேசிய கொள்கைகள் திட்டத்தின் கீழ் 2015 இல் மொத்த சனத்தொகையில் 85 வீதமான மக்களும் 2025 இல் 100 வீதமான மக்களுக்கும் பாதுகாப்பான குடிதண்ணீரை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் முன்னகர்த்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் 3 லட்சம் பேர் பயனடைவர்.

அதேசமயம் சுகாதார திட்டத்தின் கீழ் கழிவு அகற்றலில் 80 ஆயிரம் பயனாளிகள் நன்மையடையவுள்ளனர். இதில் யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பயனாளிகளே நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்.மாநகர சபைப் பிரிவில் மலசலகூடக் கழிவுகளைச் சேகரித்து கல்லுண்டாயில் வைத்து சுத்திகரிக்கும் திட்டத்தில் இது உள்வாங்கப்பட்டுள்ளது.

இதேநேரம் யாழ். கிளிநொச்சி பிரதேசங்களின் நீர்வழங்கல் திட்டத்தில் 2015 இல் யாழ்ப்பாண மக்களுக்கு 13 வீதமும், கிளிநொச்சி மக்களுக்கு 6.5 வீதமும் குடிதண்ணீர் கிடைக்கும்.

2020 இல் யாழ்ப்பாண மக்களுக்கு 22.74 வீதமும் கிளிநொச்சி மக்களுக்கு 10.86 வீதமும் குடிதண்ணீர் கிடைக்கும். 2030 இல் யாழ்ப்பாண மக்களுக்கு 43 வீதமும் கிளிநொச்சி மக்களுக்கு 21 வீதமும் பாதுகாப்பான குடிதண்ணீர் கிடைக்கும்.

இதற்காக மொத்த செலவாக நீர்வழங்கலுக்கு 10180.50 மில்லியன் ரூபாவும் கழிவு நீர் அகற்றல் மற்றும் சுகாதார திட்டத்துக்காக 3920.40 மில்லியன் ரூபாவும் செலவிடப்படும். அத்துடன் இரணைமடு அணைக்கட்டு மேம்படுத்தலுக்கு 1169.30 மில்லியன் ரூபா செலவிடப்படும்.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நகர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி 9900 மில்லியன் ரூபாவும் பிரான்ஸிய முகவர் நிலையம் 5280 மில்லியன் ரூபாவும் இலங்கை அரசு 2864.40 மில்லியன் ரூபாவுமாக மொத்தம் 18044.40 மில்லியன் ரூபா செலவில் திட்டம் துரிதகதியில் முன்னெடுக்கப்படுகின்றது என்று மேலும் கூறினார்.