Ad Widget

கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் டி20 : சச்சின் பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது வார்ன்’ஸ் வாரியர்ஸ்

கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், வார்ன்’ஸ் வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.

Cricket All-Stars Series - Citi Field

உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் மூன்று நகரங்களில் டி20 போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் தலைமையிலான அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளிலும் முன்னாள் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல் போட்டி, நியூயார்க் நகரின் சிட்டி பீல்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

டாசில் வென்ற வார்ன்’ஸ் வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசியது. சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி தொடக்க வீரர்களாக சச்சின், சேவக் களமிறங்கினர். சச்சின் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, சேவக் சிக்சராக விளாசித் தள்ளினார். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8 ஓவரில் 85 ரன் சேர்த்தது.

சச்சின் 26 ரன் (27 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து வார்ன் சுழலில் ஜாக் காலிசின் அற்புதமான கேட்ச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

சேவக் 55 ரன் எடுத்து (22 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) வெட்டோரி சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த லாரா 1, லஷ்மண் 8 ரன்னில் வெளியேற, சச்சின் பிளாஸ்டர்சுக்கு பின்னடைவாக அமைந்தது. ஓரளவு தாக்குப்பிடித்த ஜெயவர்தனே 18, கார்ல் ஹூப்பர், ஷான் போலக் தலா 11 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மொயின் கான் 1 ரன் எடுத்து சைமண்ட்ஸ் பந்துவீச்சில் காலிஸ் வசம் பிடிபட்டார். சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன் குவித்தது.

அம்புரோஸ் 1, முரளிதரன் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வாரியர்ஸ் அணி பந்துவீச்சில் கேப்டன் ஷேன் வார்ன், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தலா 3, ஆலன் டொனால்டு, வெட்டோரி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, வார்ன்’ஸ் வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 141 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் ஹேடன் 4, காலிஸ் 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிக்கி பான்டிங் – சங்கக்கரா ஜோடி 3வது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி 80 ரன் சேர்த்தது. சங்கக்கரா 41 ரன் (29 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), சைமண்ட்ஸ் 1 ரன் எடுத்து வெளியேறினர். கடைசி கட்டத்தில் ஜான்டி ரோட்ஸ் அதிரடியாக விளையாடி அசத்தினார். வாரியர்ஸ் அணி 17.2 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து வென்றது.

பான்டிங் 48 ரன் (38 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ரோட்ஸ் 20 ரன் (14 பந்து, 3 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சச்சின் பிளாஸ்டர்ஸ் பந்துவீச்சில் சோயிப் அக்தர் 2, முரளிதரன் 1 விக்கெட் வீழ்த்தினர். ஷேன் வார்ன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

வார்ன்’ஸ் வாரியர்ஸ் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி ஹூஸ்டன் நகரில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

Related Posts