கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நாளில் கண்ணீருடன் காலில் விழுந்த கோஹ்லி: சச்சின் நெகிழ்ச்சி

கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறும்போது எனது காலை தொட்டு வணங்கினார் விராட் கோஹ்லி என்று சச்சின் டெண்டுல்கர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் சுய சரிதையான “Playing It My Way” புத்தகம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியது. அதில் விராட் கோஹ்லி குறித்து சச்சின் கூறியுள்ளதாவது:

sachin-tendulkar-with-virat

2013ம் ஆண்டு நவம்பர் 16ம்தேதி நான் 200வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றேன்.

அந்த கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளில், வீரர்களுக்கான அறைக்கு விராட் கோஹ்லி வந்தார். அவரது கண்களில் கண்ணீர் இருப்பதை நான் பார்த்தேன். கோஹ்லி தனது இரு கைகளிலும் கட்டியிருந்த அதிருஷ்ட ‘பேன்ட்டை’ கழற்றி என்னிடம் தந்தார்.

மேலும், அதை அவரது தந்தை கோஹ்லிக்கு கொடுத்ததாகவும், அதை கையில் கட்டியிருப்பது அதிருஷ்டம் என்ற நம்பிக்கை கோஹ்லிக்கு உள்ளதாகவும் கூறினார்.

இதன்பிறகு திடீரென எனது காலில் விழுந்தார். அண்ணன் காலில் தம்பி விழுந்து ஆசி கேட்பதை போல நான் உணர்ந்தேன். எனக்கு பேச்சே வரவில்லை. கோஹ்லியை இறுகப்பிடித்துக் கொண்டு, நீ என் காலில் விழுந்திருக்க கூடாது, என்னை கட்டிதான் பிடித்திருக்க வேண்டும் என்று சொன்னேன்.

ஆனால் அதற்கு மேல் என்னால் எதுவும் பேசமுடியவில்லை. ஏனெனில் நான் உணர்ச்சி ததும்ப அமர்ந்திருந்தேன். தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக்கொண்டன. குரல் கம்மியது. உடனடியாக கோஹ்லியை அங்கிருந்து செல்லுமாறு கூறிவிட்டேன். ஏனெனில் உணர்ச்சிகளை தாங்க முடியாமல் நான் அழுதுவிடுவேன் என்று நினைத்துவிட்டேன்.

இதுபோன்ற மரியாதையை நான் எப்போதும் மறக்க மாட்டேன். கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சாதனைபுரிய வாழ்த்துகிறேன். இவ்வாறு உணர்ச்சி ததும்ப அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார் சச்சின்.