Ad Widget

கிராம இராஜ்ஜிய திட்டத்துக்கு கூட்டமைப்பு போர்க்கொடி!

மாகாணசபைக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் ‘கிராம இராஜ்ஜியம்’ திட்டம் அமைந்துள்ளதால் அதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

எனவே, இந்தத் திட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக, நிதி ஆகிய மூன்று அமைச்சுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய மாவை எம்.பி., பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-

2015ஆம் ஆண்டைவிட 2016இல் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்குப்பட்டுள்ளது. போர் இல்லாத சூழ்நிலையிலும் 13 பில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. வல்லாண்மை நாடுகளில்கூட பாதுகாப்புத்துறைக்கான செலவீனங்களுக்கு 4முதல் 7 சதவீதம் வரையான ஒதுக்கீடே இடம்பெறும். எனவே, இங்கு மொத்த செலவினத்தில் 14 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதை ஏற்கமுடியாது. இந்த விடயத்தில் நிதி ஆணைக்குழு எந்த அடிப்படையில் தீர்மானம் எடுத்தது? அத்துடன் 2016 ஜனவரி 16இல் கொடையாளர் மாநாடு நடக்க இருக்கின்றது.

வடக்கு அபிவிருத்திக்கு நிதி திரட்டும் வகையில் இந்த மாநாடு நடப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதுபற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது வடக்கு மாகாண சபையுடனோ பேச்சு நடத்தப்பட்வில்லை. அதேவேளை, அரசு ‘கிராம இராஜ்ஜியம’ திட்டமொன்றை மாகாண சபைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. நிர்வாக நடவடிக்கைக்காக இது அனுப்பப்பட்டிருக்குமானால் பரிசீலிக்கவேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கத்துடன் சமஷ்டி அடடிப்படையில் தீர்வுகாணப்பட வேண்டும் என்று முன்னர் பிரதமர் கூறியிருந்தார்.

எனவே, இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கத்துடன் தீர்வு காணாது, அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் இருக்குமானால் அதை நாம் எதிர்ப்போம். தற்போதைய சூழலில் அதை மீளப்பெறுவதே சிறந்தது. இனப்பிரச்சினையைத் தீர்த்த பின்னர் – அதிகாரங்களைப் பகிர்ந்த பின்னர் நிர்வாகப் பணிகளுக்காக இவ்வாறான திட்டங்களை எடுத்தால் பரவாயில்லை. ஆனால், இருக்கின்ற அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சியில் இறங்கக்கூடாது – என்றார்.

Related Posts