காலம் வரும்போது மக்களே எங்களை அரசியல் செய்யச் சொல்வார்கள்: முன்னாள் போராளிகள்

காலம் பதில் சொல்லும் போது மக்களே எங்களை அரசியல் செய்யச் சொல்வார்கள். அதுவரை அரசியலுக்கு வரும் எண்ணம் எங்களுக்கு இல்லை என புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.

மூதூர் கிழக்கு கட்டைபறிச்சானில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னர் நாம் அரசியல் செய்வதற்கு தீர்மானித்து அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பித்திருந்தோம்.

இப்போது அரசியலை விட எமது உறுப்பினர்களின் வாழ்வாதாரம் முக்கியமாகப்படுகிறது. மக்கள் விரும்பும் போது நாம் அரசியலுக்கு வருவோம். அதனைக் காலம் தான் சொல்லும்.

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அரசினால் பணம் ஒதுக்கப்பட்ட போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு அவர்களின் முன்னேற்றம் கருதி எவ்வித ஒதுக்கீடுகளையும் செய்து தரவில்லை.

புலம் பெயர்ந்த நபர்கள் வழங்கிய 50,000 ரூபாவை நாம் 22 புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு வழங்கி உள்ளோம்.

கிழக்கு மாகாண கல்வி புனர்வாழ்வு அமைச்சர் 30 பேருக்கு உதவி செய்வதாக தெரிவித்த போதிலும் எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை. அவரோடு இணைந்து பணியாற்றும் நபர்கள் சிபார்சு செய்பவர்களுக்கு உதவிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு விரோதமானவர்கள் அல்ல. அவர்களின் செயற்பாடுகள் எமக்கு திருப்தியளிக்கவில்லை. தெரிந்தவர்களுக்கு மாத்திரம் செய்யும் உதவி மாற்றப்பட வேண்டும்.

20வது அரசியல் திருத்தச் சட்டம் தொடா்பான விவகாரத்தின்போது, வடக்கு மாகாண சபை எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தாா்கள். ஆனால் கிழக்கு மாகாணசபை ஆதரவினைத் தெரிவித்து இருந்தாா்கள். இரண்டிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆட்சி செய்கிறார்கள்.

இது தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்பதையும், ஒரே கட்சிக்குள் வேறுபாடுகள் உள்ளதென்பதையும் காட்டுகிறது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts