காரைநகர் சிறுமி வன்புணர்வு; நவம்பர் 4 மீண்டும் விசாரணை

காரைநகர் சிறுமி வன்புணர் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் கடற்படைச் சிப்பாயினால் சிறுமியொருவர் 11 நாட்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கு நேற்று முன்தினம் நீதவான் கறுப்பையா ஜீவராணி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணை செய்த நீதவான் எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு விசாரணையினை ஒத்தி வைத்தார்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட 7 கடற்படைச் சிப்பாய்களும் மன்றிற்கு சமுகமளித்திருந்தனர். அத்துடன் மேலதிக அறிக்கைகளும் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை விடுமுறையில் சென்ற இரண்டு கடற்படைச் சிப்பாய்களையும் மன்றில் ஆஜராகுமாறு நீதவான் கடந்த தவணைகளில் உத்தரவிட்டிருந்தார் எனினும் அவர்கள் இம்முறை தவணைக்கும் ஆஜராகி இருக்கவில்லை.

மேலும் சம்பவம் தொடர்பில் பல சான்றுப் பொருட்களும் பொலிஸாரால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் சிறுமியின் இரத்த மாதிரியையும் கடற்படைச்சிப்பாய்களின் இரத்தமாதிரியையும் பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸாருக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.