வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை அழைத்து வந்து தம்மிடம் ஒப்படைப்பாரென எதிர்ப்பார்ப்பதாக உறவினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காய் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், நேற்று (வெள்ளிக்கிழமை) 239 நாட்களை எட்டியுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் வவுனியாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரி தங்களையும் வந்து சந்திப்பாரென்றும், குறைந்த பட்சம் ஜனாதிபதியுடன் புகைப்படமொன்றில் காணப்படும் ஐந்து பிள்ளைகளையாவது கொண்டுவந்து ஒப்படைப்பாரென நம்புவதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவி ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.
தமது நம்பிக்கை தகர்க்கப்படும் பட்சத்தில், தமது போராட்டம் இன்னும் மேலோங்கி பாரிய போராட்டமாக வெடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது வெளியான புகைப்படமொன்றில், ஜனாதிபதி மைத்திரியுடன் காணப்படும் பிள்ளைகள் ஏற்கனவே காணாமல் போனவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த புகைப்படத்தில் காணப்படும் மாணவிகள் அணிந்துள்ள கழுத்துப் பட்டி, அவர்கள் கல்வி கற்ற பாடசாலையின் கழுத்துப் பட்டி அல்லவென அண்மையில் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் பாரிய சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் வவுனியா விஜயம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.