Ad Widget

காணாமல் போனோர் ஆணைக்குழுவின் அமர்வு யாழ். பருத்தித்துறை பிரதேச செயலகத்தில்

காணாமற்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ். மாவட்டத்திற்கான மற்றுமொரு அமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெறுகின்றது.

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதியின் ஆணைக்குழு 9 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற 1620 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

நல்லூர், யாழ்ப்பாணம், கரவெட்டி, மருதங்கேணி, பருத்தித்துறை, சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாகவே ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து கிடைக்கப்பெற்ற 290 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளும்,

நாளை திங்கட்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து கிடைக்கப்பெற்ற 271 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளும் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளன.

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை சங்கானை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற 303 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் சங்கானை பிரதேச செயலகத்திலும் நடைபெறவுள்ளது.

இறுதி நாளான 16 ஆம் திகதி புதன்கிழமை தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து கிடைக்கப்பெற்ற 255 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் காலை 8.30 மணியில் இருந்து மாலை 4 மணிவரைக்கும் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் நடைபெறவுள்ளது.

Related Posts