காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி படையினரால் முற்றாக இடித்தழிப்பு

Nadeswara-College-2012-300x225வலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயமென படைத்தரப்பால் பிரகடனப் படுத்தப்பட்ட பகுதியில் காங்கேசன்துறை நடேஸடவராக் கல்லூரியும் மூன்று இந்துக் கோவில்களும் கடந்த இரு நாட்களில் படையினரால் முற்றாக இடித்து அழிக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறையில் இதுவரை மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று புதன்கிழமை நடேஸ்வராக் கல்லூரி கட்டிடங்கள் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளதாக வலி வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார்.

வலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலய பகதியை மக்களின் மீள் குடியேற்றத்திகாக விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் 2000 க்கும் மேற்பட்டோர் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் உயர் நீதி மன்ற நடைமுறகளை மீறும் வகையில் படைத்தரப்பு வலி வடக்கில் வீடுகள், கடைகள், கோயில்கள், பாடசாலைகளென நூற்றுக்கணக்கில் தொடர்ந்தும் கட்டிடங்களை இடித்தழித்து வருகிறது. இது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதியுடன் தான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மக்கள் குடியிருப்புகள் மற்றம் கட்டிடங்களை இடித்தழிக்க வேண்டாமென வலியுறுத்தியதாகவும் இதையடுத்து உடனடியாக இந்த இடித்தழிப்புகளை நிறுத்துமாறும் தனது செயலாளர் ஊடாக குடாநாட்டில் படைத்தரப்புக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்ததாக த.தே. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருந்தார்.

பொதுநலவாய மாநாட்டுக்கு இலங்கைக்கு பல நாட்டு தலைவர்களும் வந்திருந்த நிலையிலும் இதன் போது பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் வலி வடக்கிற்கு வந்திருந்த நிலையிலும் வீடுடைப்புகளை நிறுத்தியிருந்த அரசு அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் வலி வடக்கில் தமிழர் வீடுகள், பாடசாலைகள், கோயில்களை இடித்தழித்து வருகிறது. நேற்று புதன்கிழமை காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி கட்டிடங்கள் முற்றா இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. இதற்கு முன்னர் கடந்த வார பிற்பகதியில் காங்கேசன்துறையில் மூன்று கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப் பட்டன. குறிப்பாக காங்கேசன்துறை அம்மன் கோயில், நாகதம்பிரான் கோயில், பிள்ளையார் கோயில் என்பன இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இது வரை காலமும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்புறமாக இருந்த சந்திரா அச்சகத்திலேயே காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் இயங்கி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த பொலிஸ் நிலையம் அங்கிருந்து அகற்றப் பட்டு மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டது. இதனையடுத்து இது வரை பொலிஸ் நிலையம் இயங்கிவந்த சந்திரா அச்சகத்தின் கட்டிடத்தொகுதியும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்களுடைய சொத்துக்கள் இடித்து அழிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தங்களுடைய காணிகளை இனங்காண முடியாத வகையில் இவை அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இடிக்கப்படும் வீடுகளுடைய இடிபாடுகளைக் கொண்டு பாதை அமைப்பு, வேறு கட்டிடங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts