வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அடுத்த வட மாகாண சபை அமர்வில் கந்தசாமி கமலேந்திரன் கலந்துகொள்வதற்கான அனுமதியையும் வழங்கினார்.
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷசின் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பில் வட மாகாண சபை எதிர்கட்சி தலைவர் கமலேந்திரனை 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததுடன், றெக்ஷசினின் மனைவியும் மற்றுமொரு நபரும் ஊர்காவற்றுறைப் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைகள் மீண்டும் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனை உட்பட மூன்று பேரையும் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்திரவிட்டார்.