வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது என பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.
குறித்த பகுதியில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாதுள்ளமையினால் குறித்த இளைஞனின் சடலத்தை மீட்க முடியாதுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த வியாழக்கிழமை, மூன்று இளைஞர்கள் குறித்தி பகுதிக்கு இரும்பு பொறுக்குவதற்காக சென்றுள்ளனர். இதன்போதே நிலக்கண்ணி வெடியொன்று வெடித்துள்ளது.
இதனால் மேற்படி மூன்று இளைஞர்களில் ஒருவரான செல்வம் தவசீலன் (வயது 24) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் அவரின் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
இதனால், குறித்த இளைஞனின் சடலம் உள்ள இடம் சரியாக அடையாளம் காணப்படவில்லை. மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாதுள்ளமையினால் அப்பகுதிக்கு செல்வதில் ஆபத்து நிலவுகின்றது.
இதனால், தலைமறைவாகியுள்ள இரு இளைஞர்களையும் அழைத்துவந்து சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.