Ad Widget

கடலோரங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம்?

வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப மாற்றங்கள் காரணமாக நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று (02) இடி மின்னலுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இம்மழைவீழ்ச்சியினளவு 150 மில்லிமீற்ற​ரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடலோரங்களில் இடி மின்னலுடன் அதிக மழைக்கான சாத்தியம் நிலவுவதனால் அனைத்து மீனவர்கள் கடல் சார்ந்த தொழிலாளர்கள் கடற்படை வீரர்கள் என அனைவரையும் கவனத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரதான நகரங்களின் காலநிலை

நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.

அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 29 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 28 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய பிரதேசங்களில் மிதமான காலநிலை காணப்படலாம்.

மட்டக்களப்பில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக 29 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை பிற்பகல் வேளையில் மழைக்கான சாத்தியம் காணப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 30 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு பெரும்பாலும் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழைக்கான காலநிலை காணப்படலாம்.

கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக மொனராகலை பிரதேசத்தில் 31.6 செல்சியஸ் பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 14.0 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.

ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம்

நாட்டில் ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சியாக அங்கொட பிரதேசத்தில் 97.5 மில்லி மீற்றர் பதியப்பட்டுள்ளது.

Related Posts