கடற்றொழில் அபிவிருத்திக்கு ரூ.934 மில்லியன் செலவு

யாழ்.மாவட்டத்தில் கடற்றொழில் அபிவிருத்திக்காக கடந்த 4 வருடங்களில் 934.332 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாக யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலே இந்தளவு நிதி அபிவிருத்திக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு வழங்கியிருந்தது.

மீனவர்களுக்கான நிவாரணங்கள், மீன்பிடி உபகரணங்கள் வழங்கல் உள்ளிட்ட பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை யாழ். மாவட்டத்துக்கு மீன்பிடித் துறைமுகங்கள் அவசியம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ். மாவட்டத்தில் தற்போது பயன்பாட்டில் 48 நாட்கலங்கள் இருக்கின்றன. இருந்தும், அந்த நாட்கலங்களை மழை காலங்களிலும் மற்றைய நாட்களிலும் நங்கூரமிட்டு தரித்து வைப்பதற்கு துறைமுகங்கள் இல்லாமல் இருக்கின்றது.

துறைமுகங்கள் இல்லாத காரணத்தால் பருத்தித்துறை, மாதகல், நயினாதீவு, மருதங்கேணி ஆகிய பிரதேசங்களில் பல நாட்கலங்கள் வைத்திருக்கும் மீனவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

துறைமுகங்கள் அமைக்கும் இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையம், ஐஸ் தொழிற்சாலை, போக்குவரத்து வசதிகள், விற்பனை மண்டபம் மற்றும் இளைப்பாறும் இடம் என்பனவும் இணைந்து அமைக்கப்பட வேண்டும். இதன் மூலமே மீனவர்கள் சிறந்த பயனை பெறுவார்கள்.

யாழ். மாவட்டத்தில் குருநகர், இம்பசிட்டி ஆகிய பகுதிகளில் இரண்டு துறைமுகங்கள் அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.