ஒரு மாத காலமாகியும் சுழிபுரம் இறங்குதுறை திறந்து வைக்கப்படவில்லை என மக்கள் கவலை

kasurna_beachசுழிபுரம் இறங்குதுறை நிர்மாணிக்கப்பட்டு ஒரு மாதகாலமாகியும் திறந்து வைக்கப்படாமையினால் அப்பகுதி மீனவர்கள் பெரும் சிரமப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளனர். கடற்றொழில் அமைச்சு மற்றும் யூ.என்.எச்.சீ.ஆர். ஆகியன இணைந்து சுமார் 12 மில்லியன் ரூபா நிதியில் சுழிபுரம் இறங்குதுறை நிர்மாணிக்கப்பட்டது.

இந்த சுழிபுரம் இறங்குதுறையை நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன இன்று புதன்கிழமை திறந்துவைப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், அமைச்சர் திறந்து வைப்பதற்கு இன்று சமூகமளிக்காததினால் குறித்த இறங்குதுறை எப்போது திறந்து வைக்கப்படும் என்று சுழிபுரம் பகுதி மீனவர்கள் சுழிபுரம் கடற்றொழில் கூட்டுறவு சங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கமைய, சுழிபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் நீரியல் வளத்துறை மற்றும், கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் என்.கணேசமூர்த்தியிடம் இவ்விடயம் சம்பந்தமாக கலந்தரையாடியுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போது, குறித்த இறங்குதுறையினை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் இவ்விடயங்கள் தொடர்பாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் தெரிவித்து திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அந்த கோரிக்கைகளுக்கு நீரியல் வளத்துறை மற்றும், கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளரின் பதில் கிடைக்காதவிடத்து, சுழிபுரம் கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தினர், யாழ். மாவட்ட செயலாளருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க இருப்பதாகவும் சுழிபுரம் கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தினர் மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: Editor