Ad Widget

ஐநா விசேட குழு இன்று இலங்கை வருகிறது!

காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐநா விசேட குழுவொன்று இன்று (09) இலங்கை வரவுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு தங்கியிருக்கும் இக்குழு காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து எதிர்வரும 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் ஐநா மனித உரிமை பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் வருகை தரும் இக்குழுவானது காணாமற்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் செயற்குழுவின் ஐநா உப தலைவர் பேர்னாட் டூஹோ தலைமையில் ஐந்து பிரதிநிதிகளை கொண்டதாக அமைந்துள்ளது.

இக்குழு இன்று (9) நாளை (10) மற்றும் 16, 17, 18 ஆகிய திகதிகளில் கொழும்பிலும் ஏனைய நாட்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தளை, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளது.

சட்டம், ஒழுங்கு, நீதி, பாதுகாப்பு, மீள்குடியேற்றம் ஆகிய அமைச்சுக்களின் முக்கிய அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் முக்கிஸ்தர்கள், இராணுவம் மற்றும் கடற்படையின் உயரதிகாரிகள், பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு, கிழக்கு, மற்றும் தென் மாகாண ஆளுநர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர்கள் என பிரதான அதிகாரிகள் பலருடன் இக்குழு பேச்சுக்களை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts