ஏ-9 வீதியில் வேகத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 வீதியில் குறிப்பாக மாங்குளத்திலிருந்து கிளிநொச்சிக்கு இடையில் வாகனங்களை விரைவாகச் செலுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

police-AJITH-ROHANA

இவ்வாறு வாகனங்களை விரைவாகச் செலுத்துவதால், ஏற்படும் வீதி விபத்துக்களினால் அதிகளவான உயிரிழப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த வருடம் மாங்குளத்திலிருந்து கிளிநொச்சிக்கு இடையில் ஏ-9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 30 இற்கும் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

‘குறித்த பகுதியில் வீதி நேராக உள்ளதால் சாரதிகள் வாகனங்களை விரைவாகச் செலுத்த முற்படுகின்றனர். புதன்கிழமை வாகனம் ஒன்று பாதையிலிருந்து விலகிச்சென்று விபத்துக்குள்ளானதால், பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்துக்களினால் பலர் காயமடைந்துள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

நேரிய வீதியில் வாகனங்களைச் செலுத்தும்போது, விரைவாகச் செலுத்துவதை தவிர்த்துக்கொள்வதுடன், கூடிய கவனம் எடுக்குமாறும் அவர் சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.