எரிபொருள் நிலைய விவகாரம் : சட்டத்தரணிக்கு 2 ½ இலட்சம் வழங்க அனுமதி

MAYOR -yokeswareyயாழ்ப்பாணம் – கண்டி வீதியில் அமைந்துள்ள மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் மாநகர சபை சார்பாக வாதாடுவதற்காக, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சட்டத்தரணிக்கு கொடுப்பதற்காக, மாநகர சபை உறுப்பினர்களின் ஒப்புதல் நேற்று புதன்கிழமை (23) பெறப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று புதன்கிழமை (23) இடம்பெற்ற வேளையிலேயே இதற்கான ஒப்புதல் சபையின் உறுப்பினர்களினால் வழங்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார்.

இது பற்றித் தெரியவருவதாவது,

எ-9 வீதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். கிளை அமைந்திருந்த இடத்தில், செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் பணியாளர்கள் சிலரினால் எரிபொருள் நிலையம் அமைப்பதற்கு யாழ். மாநகர சபையினால் முன்னர் அனுமதி வழங்கப்பட்டது.

இருந்தும், இந்தச் சுற்றுப்புறத்தில் பிரசித்தமான 2 பாடசாலைகள் அமைந்துள்ளமையினால் இந்த எரிபொருள் நிலையத்தினை அவ்விடத்தில் அமைத்தால் பாரிய போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்டு விபத்துக்கள் அதிகரிக்கலாம். அத்துடன், காலப்போக்கில் சுற்றுவட்டத்திலுள்ள குடிநீர் கிணறுகள் எண்ணெய் கசிவினால் மாசுபடும் வாய்ப்புக்களும் இருக்கின்றன. எனவே இந்த எரிபொருள் நிலையத்திற்கான அனுமதியினை இரத்துச் செய்யும்படி அப்பகுதி மக்கள் கோரியிருந்தனர்.

இதனையடுத்து, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கமைய, எரிபொருள் நிலையத்திற்கான அனுமதியினை யாழ். மாநகர முதல்வர் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து, மேற்படி எரிபொருள் நிலையத்தினை அமைக்க முற்பட்ட முன்னாள் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள், எரிபொருள் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் மாநகர சபைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், மேற்படி வழக்கில் மாநகர சபை சார்பாக வாதிடுவதற்காக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் சட்டத்தரணியினை நியமிக்க இன்று (நேற்று) அனுமதி பெறப்பட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.

இந்த எரிபொருள் நிலையத்தினை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்த போதும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தவரும் ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எனவும் மாநகர முதல்வர் கூறினார்.

அந்தவகையில், இந்தச் செயலானது பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டதாக இருக்கின்றதாகவும் முதல்வர் மேலும் கூறினார்.