எம்மை கையேந்தும் இனமாக மாற்ற அரசு எத்தணிக்கிறது – பா.கஜதீபன்

எமது இனத்தை தொடர்ச்சியாக கையேந்தும் இனமாகவைத்திருப்பது தான் மத்திய அரசினதும், அவர்களுக்கு சேவை புரியும் கும்பலினதும் வேலைத்திட்டமாக இருக்கிறது என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.

12

கல்விரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஒரு இனம் பலவீனமாக இருக்கும் போது அந்த இனம் தான் விரும்பிய அரசியல் இலக்கை அடைவது மிகவும் கடினமானதாகும்.

தமிழினத்தை கல்வி, பொருளாதார ரீதியாக தொடர்ச்சியான முறையில் பலவீனப்படுத்துவதற்கு ஆள்கின்ற மத்திய அரசாங்கம், மக்களுடைய வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பிடவும், கல்வி ரீதியான உயர்வை எய்திடவும் முயற்சி எடுக்கின்ற மாகாண அரசாங்கத்தை செயற்படவிடாமல் திட்டமிட்ட வகையில் முடக்கி வருகின்றது.

வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் அளவெட்டி பிரதேசத்தில் பெண் தலைமைத்துவத்தை கொண்ட 32 குடும்பங்களிற்கு ஆடுகள் வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை அளவெட்டி மகாஜன சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில்வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன், பா.கஜதீபன், அனந்தி சசிதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் உரையாற்றியதாவது,

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்களோடும், மிகவும் ஆர்வத்தோடும், எவ்வாறு 1977ஆம் ஆண்டுத்தேர்தலை எதிர்கொண்டோமோ, அதற்கு சற்றும் குறைந்துவிடாமல் கடந்த மாகாணசபைத்தேர்தலையும் தமிழ் மக்கள் எதிர்கொண்டார்கள். தேர்தல் களத்தில் நிற்கின்றபோதே இம்மாகாணசபை முறை அதிகாரமற்றது என்பது எமக்கும் தெரிந்திருந்தது தான். இருந்தும் எம்மை அழித்தவர்களே எம்மை ஆண்டுவிடக்கூடாது என்கின்ற சிந்தனை ஒருபுறமும், உலக வரலாற்றில் ஒப்பீட்டளவில் எந்தவொரு இனமும் சந்தித்திராத மனிதப்பேரவலத்தை சந்தித்த எமது மக்களுக்கு ஒரு சிறிய இடைவெளி தேவை என்கின்ற காரணத்தை அடிப்படையாக வைத்துத்தான் நாம் இந்த தேர்தலைப்பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது.

இவ்வாறான சிந்தனைகளோடு தான் எம்மால் முடிந்த அளவுக்கு மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்கும் போது அதையும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாக, செய்கின்ற எல்லாவற்றுக்கும் திட்டமிட்டே முட்டுக்கட்டை போடுபவர்களாக மத்திய அரசுத்தரப்பினர் செயற்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு செயற்பட்டுக்கொண்டு, அதிகாரம் மிக்க சபையை செயற்படுத்தத் தெரியாதவர்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரை வேண்டுமென்றே மக்கள் மத்தியில் அந்நியப்படுத்துவது மாதிரியான செயற்பாடுகளை மத்திய அரசுத்தரப்பினரும், அவர்களுக்கு சேவகம்செய்து வருகின்ற தரப்புக்களும் பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதானது மிகப்பெரிய அரசியல் மோசடியாகும்.

குறித்த கும்பலின் பொய்பிரசாரங்களை எமது மக்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். அவர்களுடைய நோக்கம் மக்களுக்கு மாகாணசபை எதுவும் செய்து விடக்கூடாது என்பதுவும், தொடர்ச்சியாக எமது மக்கள் மிகவும் பலவீனமானவர்களாகவே இருக்க வேண்டுமென்பதும் தான் ஆகும்.

ஏனெனில் மக்கள் கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் பலமற்றவர்களாக வைத்திருக்கும் போது தான் அம்மக்கள் உரிமை சார்ந்த விடயங்களில் ஆர்வம் காட்டாமலிருப்பார்கள் எனும் தவறான சிந்தனை தான் அவர்களிடம் காணப்படுகிறது.

ஆனால் எம்மக்கள் எந்த நிலையிலும் தாம் கொண்ட லட்சியத்தில், கொள்கைப்பிடிப்பில் உறுதியானவர்கள் என்பதை தொடர்ச்சியாகவே நிரூபித்து வந்திருக்கின்றார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

ஆனாலும் எமக்கு மிகப்பாரிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது. மக்களுக்கு அரசியல் ரீதியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டிலும் நாம் அனைவரும் ஈடுபட வேண்டியது அவசியமாகும்.அவ்வாறானதொரு நிகழ்ச்சியே இது எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

தகர் என்ற பெயரில் நல்லின ஆடுவளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பு