Ad Widget

என் கணவனை இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன் – அனந்தி

ananthy-sasikaran-tna“கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்தபோது பூவும் பொட்டுடனும் சுமங்கலியாகவே இருந்தேன். அதேபோல் இன்றும் நான் அப்படியே இருக்கின்றேன். இனியும் நான் இப்படியே தான் இருப்பேன்”

‘அன்றைய தினம் நானிருந்த மன உளைச்சலுக்கு மத்தியில், எனது கணவரான தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட தளபதி எழிலனை இராணுவ சீருடையிலிருந்த உயரதிகாரிகளிடம் ஒப்படைத்தேன்’ என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார்.

காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முன்னிலையில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் சாட்சியமளித்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இந்த சாட்சியமளிக்கு நடவடிக்கை இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

இதன்போது ஆணைக்குழு முன் தோன்றிய வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ‘2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நான், எனது கணவன் மற்றும் பிள்ளைகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். அவ்வேளையில் என்னையும் எனது பிள்ளைகளையும் தனியாக வவுனியாவிற்குச் கூட்டிச்சென்ற இராணுவத்தினர், எனது கணவனை விசாரணை செய்துவிட்டு விடுதலை செய்வதாக தெரிவித்திருந்தனர்’ என்று சாட்சியமளித்தார்.

‘தொடர்ந்து நானும் பிள்ளைகளும் செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் வலயம் 4இல் தங்கவைக்கப்பட்டோம். இருந்தும் என் கணவர் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலைமை இன்னமும் நீடிக்கிறது. எனது கணவன் பற்றி இதுவரையிலும் எவ்வித தகவலும் இல்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘இறுதியாக 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனது கணவரை ரயிலில் அழைத்துச் செல்வதைக் கண்டதாக எனது உறவினர் ஒருவர் எனக்கு தெரிவித்தார். அதன் பிறகு என் கணவரைப் பற்றிய எவ்வித தகவல்களும் இல்லை.

நான் எனது கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்தபோது பூவும் பொட்டுடனும் சுமங்கலியாகவே இருந்தேன். அதேபோல் இன்றும் நான் அப்படியே இருக்கின்றேன். இனியும் நான் இப்படியே தான் இருப்பேன்’ என்று அனந்தி சசிதரன் கூறினார்.

‘உங்கள் கணவர் எவ்வளவு காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்?’ என்று ஆணைக்குழுவினரால் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த அனந்தி, ‘நான் அவரைத் திருமணம் செய்வதற்கு முன்னர் இருந்தே அவர் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் நான் அவரை 1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி திருமணம் செய்தேன்’ என்று தெரிவித்தார்.

‘உங்கள் கணவரை ஒப்படைத்த இராணுவ அதிகாரியினை அடையாளப்படுத்த முடியுமா?’ என ஆணைக்குழுவினர், அனந்தி சசிதரனிடம் மற்றுமொரு கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,

‘நான் எனது கணவனை ஒப்படைத்து 4 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய தினம் நான் அவரை ஒப்படைக்கும் போது யுத்தத்தின் அகோரத்தினால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். இதனால் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன் என்பதை அவர்களின் உடைகளிலிருந்த சின்னங்கள் மூலம் உணரமுடிகிறதே தவிர அவர்களை அடையாளப்படுத்த என்னால் முடியாது’ எனத் தெரிவித்தார்.

‘காணாமற்போனோர் மற்றும் ஏனையவர்களுக்காக என்னால் மேற்கொள்ளப்படும் நியாயமான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதற்காக நான் எங்கும் செல்வேன. நான் தற்போது பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றேன். எனினும் எனது நியாயமான போராட்டத்தினை கைவிடப்போவதில்லை’ எனவும் அனந்தி தெரிவித்தார்.

‘காணாமற் போனோர் தொடர்பிலான விடயத்தில் உள்நாட்டிலே தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் மனம்மாற வேண்டும். அத்துடன், இதற்கு முன்னர் காணாமற் போனோருக்கான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் எவ்வித பயனும் கிட்டவில்லை. தற்போது இருக்கும் இந்த ஆணைக்குழுவினால் காணாமற்போனோர் தொடர்பில் தீர்வு கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை’ என்றும் அனந்தி தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம, ‘சுதந்திரமான விசாரணைகளுக்கு வழி ஏற்படுத்தப்படுவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதியான முறையில் இந்த ஆணைக்குழுவினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என உறுதியளித்தார்.

Related Posts