என்னை கொலை செய்வார்களோ தெரியவில்லை: மன்னார் ஆயர்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கக் குழுவினரிடம் தெரிவித்தமையினால் என்னைக் கொலை செய்கிறார்களே தெரியவில்லை என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

mannar-jaffna-ayaar-stpeen

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்புடன் யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“இவற்றை நான் அமெரிக்கக் குழுவிற்குத் தெரிவிப்பது நாட்டின் நன்மைக்கே. இங்குள்ள மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். மாறாக அரசாங்கத்தையோ அல்லது அரசாங்கத்தில் உள்ளவர்களையே பழிவாங்கும் நோக்குடன் நான் இதனைத் தெரிவிக்கவில்லை” என்றார்.

இந்த சந்திப்புத் தொடர்பாக யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஜெனிவாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையில் 2009ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவினால் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது” என்றார்.