எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலே போட்டியிடுவார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என அக்கட்சி நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

Ranil_Wickramasinghe

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலா காரியவசம் நேற்று செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி வேறு ஒரு வேட்பாளரையும் நிறுத்தாது, ஊழலற்ற, நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய அதன் தலைவரையே வேட்பாளராக நிறுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்தில் சில மூத்த அமைச்சர்களின் தொகுதிகளில் தோல்வி ஏற்படக் காரணம் அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களுக்காக அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததே.

ராஜபக்‌ஷக்கள் ஊடாகவே நிதி ஒதுக்கீடு இடம்பெறுகின்றது. அரசாங்கம் சில மூத்த அமைச்சர்கள் வெற்றி பெறுவதை விரும்பவில்லை. அவர்களை தோற்கடிக்க விரும்பியது. ராஜபக்‌ஷக்களுக்குத் துதிபாடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் வெல்ல வேண்டும் என அரசாங்கம் விரும்பியது.

ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு முடிவுகட்ட மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிராக மக்களை வீதியில் இறக்கி அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை காண்பிக்கப்போகின்றது – என குறிப்பிட்டுள்ளார்.