புலம்பெயர், உள்நாட்டு தமிழ் பேசும் மக்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து எப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் 75ஆவது அகவைப் பூர்த்தி நிகழ்வு மன்னார் ஆயரின் வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆயர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
‘எமது மக்களின் நன்மையிலும் தீமையிலும், வாழ்க்கையிலும் மரணத்தறுவாயிலும் பக்கத்தில் நின்று, இறுக்கமான ஒரு காலத்தின் போதும் எம்மக்களுக்கு அரிய பல சேவைகள் புரிந்து வந்துள்ளார்.
இனிவருங்காலத்தில் இறுக்கம் தளர்ந்த நிலையில் ஆனால் குழப்பம் மிகுந்த சூழலில் அடுத்த கட்டமாக தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ஒரு பொதுவான அரசியல் முடிவுக்குவர உதவ வேண்டிய நிலையில் உள்ளார்.
ஆயரின் தலைமைத்துவத்தின் கீழ் புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்கள், உள்நாட்டுத் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரும் இனிவருங்காலத்தில் எப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது.
ஆயருக்கு இந்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் பேசும் மக்களிடையே ஒரு பெருமதிப்பு இருக்கின்றது. அவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒரு தீர்வை நோக்கி நாம் ஆராய்ந்து செல்வதில் தவறில்லை என்று கணிக்கின்றேன்.
எந்தவிதமான சூழலாக இருந்தாலும் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலேயே கண்ணும் கருத்துமாக ஆயர் இருப்பார். அவர் தனது தூக்கத்தை மறந்து, சுகங்களை மறந்து, சுற்றங்களை மறந்து, சுய பாதுகாப்பைக் கூட மறந்து அவரை வருத்தும் பிரச்சனைக்கு தீர்வு எவ்வாறு காண்பது என்ற எண்ணத்திலேயே திளைத்திருப்பார்.
நோய் நொடியின்றி வாழ்ந்து, தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு நியாயமான, நிரந்தரமான, நீதியான தீர்வைப் பெற ஆயர் உதவி செய்வார்’ என முதலமைச்சர் கூறினார்.