நாடு கடத்தப்பட்ட எச்.ஐ.வி. தொற்றாளர்கள் 40பேர் யாழில் வசிக்கின்றனர்!!

எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான நாற்பது இலங்கையர்களை சில நாடுகள் நாடு கடத்தியுள்ளது. இந்த 40பேரும் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிஸன், நேற்று (31) நாடாளுமன்றத்தில் கூறினார்.

நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போதே ஹரிஸன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனையடுத்து, ஹரிஸனின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க, ‘எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 772பேர் மட்டுமே இலங்கையில் உள்ளனர்’ என்று கூறினார்.

உலகின் 33 நாடுகள், இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆயினும், இலங்கையில் இவ்வகை நோயாளர்கள் அதிகரித்துள்ளனர்.

இலங்கையில், 196 நோயாளர்கள் கடந்த வருடம் இனங்காணப்பட்டனர். இந்த வருடம் ஒக்டோபர் வரையில் 169 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த நோயை சுகப்படுத்த முடியாது. எனினும், எச்.ஐ.வி தொற்றுடையவர்களுக்கு கூட்டு வைரஸ் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்படுவதாக திஸாநாயக்க கூறினார்.

அமைச்சரின் விவரத்தை மறுத்த ஹரிஸன், எச்.ஐ.வி தொற்றுள்ள 40பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கூறினார்.

‘அவர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர். இப்போது, இலங்கையில் இந்தியா, பங்களாதேஷ் பிரஜைகள் வேலை செய்கின்றனர். அரசாங்கத்தால் தொற்றுள்ளவர்களை இனங்காண இரத்த பரிசோதனை செய்ய முடியுமா?’ என அவர் வினவினார்.

சம்மதமில்லாமல் இந்த மருத்துவ சோதனையை சகலர் மீதும் மேற்கொள்வதில் சட்ட பிரச்சினை உள்ளதென பிரதி அமைச்சர் கூறினார்.