ஊர்காவற்துறை தம்பாட்டி கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் வடக்கு விவசாய அமைச்சால் ஆரம்பம்

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் ஊர்காவற்துறை தம்பாட்டி கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் இன்று திங்கட்கிழமை (18.08.2014) முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் நிலவும் வழமைக்கு மாறான வரட்சியால் பல்வேறு இடங்களிலும் குடிநீருக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவிவருகிறது. உள்ளூராட்சி மன்றங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகள் குடிநீர் வழங்கலை பவுசர்கள் மூலம் மேற்கொண்டு வந்தபோதும் குடிநீருக்கான தட்டுப்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் அண்மையில் வடமாகாண விவசாய அமைச்சில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுடன் குடிநீர் வழங்குதலை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொள்ளும் குடிநீர் வழங்கும் சேவைக்கு மேலதிகமான உதவி தேவைப்படின் அதனை வடக்கு மாகாண விவசாய அமைச்சு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையிலேயே தம்பாட்டி கிராமத்துக்கு பவுசர்கள் மூலம் நீர் வழங்கும் திட்டத்தை வடமாகாண விவசாய கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஊர்காவற்துறை பிரதேசசபையுடன் இணைந்து ஆரம்பித்துள்ளது.

தம்பாட்டி கிராமத்துக்கு நீர்வழங்கும் நிகழ்ச்சி அக்கிராமத்தின் பொதுநோக்கு மண்டபத்தில் சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.

இந்நிகழ்சியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வடமாகாணசபை உறுப்பினர்களான பா.கஐதீபன், விந்தன் கனகரட்னம், இ.ஆர்னல்ட், ஊர்காவற்துறைப் பிரதேசபையின் செயலாளர் என். சுதர்ஐன், தம்பாட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் அ.அன்னராசா, நீர் வழங்கல் திட்டத்துக்கு நிதி உதவி வழங்கிய அன்பே சிவம் அமைப்பின் வடகிழக்கு மாகாண இணைப்பாளர் கு.குமணன் உட்பட கிராமத்து மக்களும் கலந்து கொணடிருந்தார்கள்.

1

5

6

8

9

10

Recommended For You

About the Author: Editor