ஊடக அச்சுறுத்தல் தொடர அனுமதிக்க வேண்டாம்: விந்தன் கனகரத்தினம்

tnaவலம்புரி பத்திரிகையின் செய்தியாளரான உதயகுமார் சாளின் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

செய்தியாளரை நடு வீதியில் வைத்து தாக்கிய ஆறு பேர் அடங்கிய கும்பல் அடையாளப்படுத்திக் கொண்டபோதும், இன்று வரை கைது செய்யப்படாததையிட்டு தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் சில பத்திரிகையாளர்கள் மீதும் பத்திரிகை நிறுவனங்கள் மீதும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியலாளர்கள் மீதும் தொடர் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வரும் நிலையில், இப்பொழுது இறுதியாக வலம்புரிப் பத்திரிகையின் செய்தியாளர் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்படடுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய மிலேச்சத்தனமான, மனித நேயத்திற்கும், மனித பண்பிற்கும் துளியேனும் ஒவ்வாத செயல்கள் யாழ் மண்ணில் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாகவும், தொடர்கதையாகவும் அரங்கேற்றப்பட்டு வரும் மற்றுமோர் அங்கமாக இச்செயல் இடம்பெற்றுள்ளது என அவர் கூறினார்.

‘இவ்வாறான செயற்பாடுகள் யாழில் அதிகரிக்குமென்றால், ஊடக சுதந்திரம் அழியும் நிலை ஏற்படலாம். ஊடகவியலாளரை தாக்கியவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

அதற்கு யாழ். பொலிஸார் விரைந்து விசாரணை மேற்கொண்டு தாக்குதல் சூத்திரதாரிகளை கைதுசெய்து தண்டனை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். தண்டணை விதிக்கபடாவிட்டால், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்கள் மத்தியில் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் இந்நிலை தொடர அனுமதிக்க கூடாதென்றும்” அவர் தனது கண்டண அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor