Ad Widget

இ.போ.ச. பஸ்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து யாழ். நகரில் கண்டனப் பேரணி!

இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்தும், தாக்குதல்களை மேற்கொள்வோரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினர்.

ctb-112015

யாழ்.மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி ஆஸ்பத்திரி வீதி வழியாக கண்டி வீதியை அடைந்து , கண்டி வீதி வழியாக மாவட்ட செயலகத்தை அடைந்தது.

பேரணியாக வந்தவர்கள் யாழ்.மாவட்ட செயலகத்தினுள் செல்ல முயன்ற போது அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் மாவட்ட செயலக பிரதான வாயிலுக்கு வந்து பேரணியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மகஜரைப் பெற்றுக்கொண்டனர்.

பருத்தித்துறை டிப்போவில் இருந்து நேற்று முன்தினம் திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்தச் சம்பவத்துடன் கடந்த 2015ஆம் ஆண்டில் வடபிராந்தியத்துக்கு உட்பட்ட போக்குவரத்து சபைக்கு சொந்தமான 57 பேருந்துகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இவ்வாறன சம்பவங்கள் தொடர்பில் உரியவர்களுக்கு முறைப்பாடு செய்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் யாழ்.மாவட்ட செயலகத்தினால் தனியார் பேருந்துக்களுக்கு முறையற்ற விதத்தில் வழித்தட அனுமதிகள் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Posts